நூறு வருடங்களில் மிக அதிக வெப்பமான மே மாதம் ஸ்பெய்னில். தொடரும் வெப்ப அலை பிரான்ஸை நோக்கி.

இந்தப் பருவகாலத்துக்கு வழமையற்ற மிகவும் அதிக வெப்ப நிலை ஸ்பெய்னைத் தாக்கிவருகிறது. ஏற்கனவே, 100 வருடங்களில் இல்லாத மே மாத வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட ஸ்பெய்னில் சமீப நாட்களில் ஆங்காங்கே வெப்பமானி 40 பாகை செல்சியஸைத் தொட்டிருக்கிறது. 

ஸ்பெய்னில் அண்டலூசியா, கொர்டோபா பிராந்தியங்களில் வெப்பநிலை 44 பாகை செல்சியஸைத் தொட்டு வருகிறது. இதே போன்ற வெப்பம் அடுத்த வாரத்திலும் தொடரலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. அதே வெப்ப அலையானது பிரான்ஸை நோக்கி நகர்வதாக வானிலை அறிக்கை குறிப்பிடுகிறது.

மிகக் குறைவான பனியையே இவ்வருடம் ஸ்பெய்ன் அனுபவித்தது. அதையடுத்து மே மாதமும் மிகவும் வரட்சியாக இருந்ததால் நாட்டின் முக்கிய நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் குறைவாகியிருக்கிறது. நாட்டின் சுமார் 10 விகித மின்சாரத் தயாரிப்பு நீர் நிலைகளிலிருந்தே பெறப்படுவதால் இதனால் நாட்டின் மின்சாரத் தயாரிப்புக்குப் பெரும் இடையூறு உண்டாகுமென்று குறிப்பிடப்படுகிறது.

கடந்த பத்து மாதங்களில் ஸ்பெய்ன் சுமார் நான்கு தடவைகள் மிக அதிகமான வெப்பத்தைக் கண்டிருந்தது. கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மொண்டோரோ பகுதிகளில் 47.4 பாகை செல்சியஸாக வெப்ப நிலை உயர்ந்திருந்தது. வருடாவருடம் நாட்டில் கோடைகாலத்தின் அளவு அதிகரித்து வருவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 

கோடைகாலம் நீண்டுகொண்டிருக்க மற்றைய காலங்களெல்லாம் குறுகிக்கொண்டிருக்கின்றன. – வெற்றிநடை (vetrinadai.com)

பிரான்ஸை ஓரிரு நாட்களில் கடும் வெப்ப நிலை தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அங்கே கடுமையான வரட்சி நிலவுவதால் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. மே மாத வெப்பநிலையானது வழக்கமான வருடங்களை விடச் சுமார் 11- 13 பாகை அதிகமாக இருந்தது. வரும் நாட்களில் 38 பாகை செல்சியஸ் பிரான்சின் பல பகுதிகளில் காணப்படும்.

பக்கத்து நாடான போர்த்துக்காலிலும் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கே கடந்த வருடம் அதன் விளைவாகப் பல இடங்களில் காட்டுத்தீ பரவியது. மனித நடவடிக்கைகளால் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களின் விளைவே இத்தகைய தீவிர காலநிலையை ஆங்காங்கே உண்டாக்கி வருவதாகவும் இந்த நிலை மேலும் அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *