சான்றோர் துணையை கைவிட்டால் பலமடங்கு தீமை – குறள் சொல்லும் பாடம்
குறளும் பொருளும்.
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்பை விடல்– 450
சான்றோரின் துணையைக் கைவிடுதல், பலரோடும் பகை கொள் வதைவிடப் பத்து மடங்கு தீமை தரக்கூடியது என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.
பொதுவாக பகை என்பது தீமை செய்யக்கூடியது. விளையாட்டுக்குக் கூட பகை என்பது ஒருவரிடமும் இருக்கக்கூடாது என்பார் திருவள்ளுவர் (குறள்-871). பலரிடமும் தனியாய் பகை கொள்பவர் மனநிலைச் சரியில்லாதவரைவிடத் தாழ்ந்தவராவாராவர். (குறள்-873) ஒரு தனிமனிதன், ஒரு நாடு, ஒரு அமைப்பு என எவற்றிலும் உட்பகை, வெளிப்பகை என எந்த ஒரு பகையும் இல்லாமல் இருத்தல் நல்லதாகும்.
வாழ்வில் முன்னேறும் வழியைச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என்றால் அதற்கு அமைதி கட்டாயம் வேண்டும்.
தீமையைச் செய்யும் பகையைவிடத் தீயது ஒன்று உள்ளது. அதுதான், நல்லவரின் தொடர்பைக் கைவிடுதல். ஒருவன் தளர்ச்சியும் மனச்சோர்வும் அடையும் போது ஊன்றுகோலாய் இருந்து அவனைக் கீழே விழாமல் இலக்கை நோக்கி, வெற்றி நடை போடச் செய்வது நல்லாரின், சான்றோரின் சொற்கள்தன்.
பலரைப் பகையாகக் கொண்டாலும் பகைவரைப் பிரித்து ஒவ்வொருவராக எதிர்நோக்குதல், அவர்களுக்கு உள்ளேயே பகையைத் தூண்டி விடுதல், சிலரை நமக்குத் துணையாக்கிக் கொள்ளுதல் எனப் பலவகையிலும் பகைவரை எதிர்கொள்ளலாம்.
ஆனால் நல்லவன் தொடர்பைக் கைவிட்டால் துன்பம் வரும்போது உடனிருந்து வழிசொல்ல ஆளில்லாததால், ஒருவர் தீமையிலிருந்து தப்ப முடியாது.
பகையை வளர்ப்பது தீது. ஆனால் அதைவிடத் தீமையைத் தருவது, நல்லவரின் தொடர்பைக் கைவிடுதல். எனவே பகைவரை வளர்த்தாலும் வளர்க்கலாம் நல்ல நண்பர்களின், சான்றோரின் நட்பை துணையை ஒருபோதும் கைவிடக்கூடாது.
எழுதுவது : புலவர் ச.ந.இளங்குமரன்
நாகலாபுரம், தேனி.