கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வரவேற்கும் இஸ்ராயேல் “தேமி” இயந்திர மனிதர்கள்.
தமிழ்நாட்டில் முதல் முதலாக பயணிகளுக்கு உதவும் பணியில் ஈடுபடுகின்றன இயந்திர மனிதர்கள். செயற்கையறிவூட்டப்பட்ட இயந்திர மனிதர்கள் இருவரை வியாழன்று முதல் முதலாக கோயம்புத்தூர் விமான நிலையம் பணிக்கமர்த்தியிருப்பதாக விமான நிலையத்தின் நிர்வாகி செந்தில் வளவன் தெரிவித்திருக்கிறார். 7,500 பிரயாணிகள் வரை தினசரி கடக்கும் அந்த விமான நிலையத்தின் வரவேற்பு மன்றம், புறப்பாடு மன்றம் ஆகியவற்றில் தலா ஒரு இயந்திர மனிதர் பயணிகளுக்கு உதவுவர்.
வெவ்வேறு விதமான துறையின் அலுவலகங்களில் பணிக்கு அமர்த்தப்படக்கூடிய இயந்திர மனிதர்களைத் தயாரித்து உலகச் சந்தைக்குக் கொண்டுவந்திருக்கும் இஸ்ராயேல் நிறுவனமான Robotemi யே கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இயங்கவிருக்கிறது. Robotemi நிறுவனம் அவற்றை ஆறு மாதங்களுக்குப் பரீட்சார்த்தமாக இயங்க இலவசமாக வழங்கியிருக்கின்றது.
கொரோனாப் பரவல் காலத்தில் மனிதர்களுக்கு இடையேயான நெருங்கல்களைக் குறைப்பதற்காக இந்த நிறுவனத்தின் இயந்திர மனிதர்கள் ஹொங்கொங், ஜப்பான், தென் கொரியா, சீனா உட்பட்ட தென்கிழக்காசிய நாடுகளின் மருத்துவ மனைகளில் பணிக்கமர்த்தப்பட்டார்கள்.
கோயம்புத்தூர் விமான நிலையப் பயணிகளை வரவேற்று வழிகாட்டும் இயந்திர மனிதர்கள் அவர்கள் பிரத்தியேக கேள்விகள் கேட்கும் பட்சத்தில் விமான நிலையத்தின் உதவி நிலையத்துடன் அந்த இயந்திர மனிதரிலிருக்கும் திரையின் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்படும். ஆரம்பக் கட்டத்தில் ஆங்கிலத்தை மட்டுமே தொடர்பு மொழியாகக் கொண்டிருக்கும் இயந்திர மனிதரை வெவ்வேறு மொழிகளில் இயங்கவைக்கும் திட்டம் இருப்பதாக அந்த நிறுவன அதிகாரி குறிப்பிட்டார்.
இம்மாத ஆரம்பத்தில் இந்த இயந்திர மனிதர்கள் பங்களுர் விமான நிலையத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்