புளிக்கவைத்த ரொட்டியால் இஸ்ராயேல் அரசு தனது பெரும்பான்மையை இழந்தது.

ஒரேயொரு வாக்கால் பெரும்பான்மை பெற்றிருந்த இஸ்ராலிய அரசாங்கத்திலிருந்து விலகியிருக்கிறார் இடிட் சில்மான் என்ற பாராளுமன்ற உறுப்பினர். அதனால் நப்தலி பென்னட்டின் கூட்டணி அரசு 60 – 60 வாக்குகளையே கொண்டு சுருங்கிப்போயிருக்கிறது. மேலுமொருவர் ஆளும் கூட்டணியிலிருந்து விலகினால் பென்னட் அரசை எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் விழுத்தும் நிலைமை உண்டாகியிருக்கிறது. 

நீண்டகாலம் இஸ்ராயேலின் பிரதமராக இருந்து தற்போது எதிர்க்கட்சியிலிருக்கும் பெஞ்சமின் நத்தான்யாஹு சில்மான் எடுத்த முடிவை வரவேற்று அவரை வாழ்த்தினார். யமீனா என்றழைக்கப்படும் யூதப் பழமைவாதக் கட்சியின் 7 உறுப்பினர்கள் அரசில் இருந்தார்கள். சில்மான் விலகிய பின்னர் 6 பேரின் ஆதரவு மட்டுமே அரசுக்கு உண்டு.

பென்னட் அரசு எடுத்து வரும் பல முடிவுகள் தனது யூத அடையாளத்துக்கு முரணாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார் சில்மான். ஆயினும், சமீபத்தில் நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் பாஸ்கு சமயத்தில் மருத்துவமனையில் இருப்பவர்களைச் சந்திக்க வருபவர்கள் “புளித்த மாவால் செய்யப்பட்ட ரொட்டியை” [hametz] என்று அனுமதி கொடுத்ததைத் தன்னால் சகிக்க முடியாது என்கிறார். 

[பாஸ்கு பண்டிகைக் காலத்தில் புளித்த மாவால் செய்யப்பட்ட ரொட்டியைச் சாப்பிடுவது யூதக் கோட்பாடுகளுக்கு எதிரானதாகும். இஸ்ராயேலர்கள் எகிப்திலிருந்து தப்பியோடியபோது புளிக்கவைத்த மாவை ரொட்டியாக்க முடியாமல் அதை அப்படியே எடுத்துச் செல்லவேண்டியிருந்ததை ஞாபகம் கொள்வதற்காகவே அந்தத் தடை தொடர்கிறது.]

சில்மான் ஆளும் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகி எதிர்க்கட்சிக்குத் தாவியதற்கான உண்மையான காரணம் ஆளும் கட்சியைப் புரட்டிவிட்டு எதிர்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் நத்தான்யாஹு கட்சிக் கூட்டணியினர் அப்படியான சந்தர்ப்பத்தில் சில்மானுக்கு அமைச்சர் பதவி கொடுக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்திருப்பதே என்கிறார்கள் சக உறுப்பினர்கள் சிலர்.

ஆளும் கட்சிக் கூட்டணியிலிருந்து வெளியேறுகிறவர்களைச் சேர்த்துக்கொண்டால் புதிய தேர்தலை எதிர்கொள்ளாமலேயே ஒரு அரசாங்கத்தை அமைக்க எதிர்க்கட்சிகள் கூட்டணிக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *