தாய்லாந்திலிருக்கும் சுவீடிஷ் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு “தந்தையர்-பிரசவ விடுமுறை” கொடுக்கின்றன.
ஆண் – பெண் சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுடைய வேலைப்பளுவைக் குறைத்து, தந்தையர் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிடவும் வேண்டும் என்ற நோக்கில் சுவீடன் அரசு “தந்தையர் பிரசவ விடுமுறையை” அறிமுகப்படுத்தியது. சுவீடன் நிறுவனங்கள் அதைத் தாம் இயங்கும் வெளிநாடுகளிலும் அறிமுகப்படுத்தி வருகின்றன.
பிரசவத்துக்குப் பின்னர் பெற்றோருக்கு 480 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை கொடுக்கப்படுகிறது. அவற்றில் ஒரு பாதி தாய்க்கும் மற்றொரு பாதி தந்தைக்கும் என்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. 1974 இல் பெற்றோர் தமது விருப்பப்படி அந்த விடுமுறையைத் தமக்குள் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆரம்பித்து 1995 இல் ஒரு பகுதி கட்டாயமாகத் தந்தை அல்லது தாயாருக்காக ஒதுக்கப்பட்டது. சுமார் 90 விகிதமான சுவீடிஷ் தந்தையர் தமது பிள்ளைகளுடன் நேரத்தைக் கழிப்பதற்காகப் பிரசவகாலத் தந்தையர் விடுமுறை எடுத்துக்கொள்கின்றனர்.
சுவீடிஷ் நிறுவனங்கள் பிரசவ காலத் தந்தையர் விடுமுறையைத் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். தாய்லாந்தில் இயங்கும் 12 சுவீடிஷ் நிறுவனங்கள் தமது ஊழியர்களில் ஆண்களுக்கு அவ்விடுமுறையை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. அவ்விடுமுறையை எடுக்கும் ஆண் ஊழியர்களுக்கு 80 % விகித ஊதியம் கொடுக்கப்படுகிறது.
ஆண்கள் தமது பிள்ளைகளுடன் நேரத்தைக் கழிப்பது வழக்கமில்லாமல் இருக்கும் தாய்லாந்தில் அப்படியான நடவடிக்கையால் பெண்களுக்கு வேலைப்பளு குறைகிறது. அதேசமயம் பெண்களும் தமது தகுதிக்கேற்ற தரமான வேலைகளில் சேர்ந்து உயர்ந்த பதவிகளை அடைய வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இப்படியான நடவடிக்கை நிறுவனங்களுக்கு நற்பெயரைக் கொடுத்து அதன் மூலம் உயர்தகுதியுள்ள ஊழியர்களை ஈர்க்கவும் உதவும் என்று கணிக்கப்படுகிறது.
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் இதே போன்று சில சுவீடிஷ் நிறுவனங்கள் பிரசவ கால விடுமுறையைத் தந்தையருக்கும் அறிமுகப்படுத்தியிருக்கின்றன. ஆண்- பெண் சமத்துவத்தைப் பேணி ஊக்குவித்தல், பக்குவமான, ஊழியர்களுக்குத் திருப்திதரும் வேலைத்தள சூழலைப் பேணுதல் போன்றவை நிறுவனங்களுக்குப் பொருளாதார ரீதியில் வெற்றியையே கொடுக்கின்றன என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்