ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்அகதிகளை ஏற்றுக்கொள்வது பற்றித் தற்காலிகமான ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டன.
பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே பெரும் மனஸ்தாபங்களை உண்டாக்கிய விடயமாக இருந்து வருகிறது உள்ளே புகலிடம் கேட்டு வருபவர்களை எப்படிக் கையாள்வது, பகிர்ந்துகொள்வது போன்ற விடயங்கள். ஐரோப்பிய நீர் எல்லைகளிலிருக்கும் நாடுகள் தம்மிடம் வந்து குவிபவர்களை மற்றைய நாட்டினரும் சேர்ந்து பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. ஒரு சில ஐரோப்பிய நாடுகள் எவருக்குமே தமது நாட்டுக்குள் புகலிடம் கொடுக்க மறுத்து வருகின்றன.
2015 இல் ஐரோப்பாவுக்குள் நுழைந்த அகதிகள் அலையைத் தொடர்ந்தே மேற்கண்ட நிலைமை மோசமாகியது. உக்ரேன் அகதிகளைப் பொறுத்தவரை முன்னர் மறுத்த நாடுகள் பலவும் அவர்களுக்காக மட்டும் தமது கதவுகளைத் திறந்தன. இந்த நிலையில் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஒன்றிய நாடுகள் ஒரு வருடத்துக்குத் தற்காலிகமாகத் தமக்குள் அகதிகளை ஒற்றுமையாகப் பங்கிட்டுக் கொள்வதாக ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கின்றன.
இந்தத் தீர்மானத்தின் அடிப்படை ஒற்றுமையான பொறுப்புணர்வு ஆகும். எல்லையிலிருக்கும் நாடுகளின் பெரும் பாரத்தை வெவ்வேறு வகைகளில் சுமக்க ஒன்றிய நாடுகள் சகலமும் ஒத்துக்கொண்டிருக்கின்றன. அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நாடுகள் அவர்களைத் தமக்குள் பகிர்ந்துகொள்ளும். அகதிகளைத் தமது நாட்டுக்குள் ஏற்க முடியாது என்று சொல்லும் நாடுகள் அவர்களுக்கான செலவு, எல்லைப் பாதுகாப்பு போன்ற மற்றைய பொறுப்புக்களில் சம அளவாகப் பங்கெடுக்கும்.
அதே சமயம் அகதிகளாக வருகிறவர்களின் விபரங்களை எல்லைகளில் பதியும்போது அவற்றில் பலவற்றை ஐரோப்பிய நாடுகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் நாடுகள் ஒத்துக்கொண்டிருக்கின்றன. சகல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடைய விருப்பங்களுக்கும் ஏற்றபடி அகதிகள் விண்ணப்பம் செய்தவர்களின் பின்னணிகள் குறித்த விசாரணைகள் நடத்தப்படவும் இருக்கின்றன. அப்படியான விபரங்களின் மூலம் தீவிரவாதிகள், வெவ்வேறு நாடுகளில் குற்றங்களை இழைத்தவர்கள் ஆகியவர்கள் பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.
சாள்ஸ் ஜெ. போமன்