சுற்றுலாப்பயணிகள் படையெடுக்கும் கிரவேசியா தொழிலாளர்கள் போதாமல் தவிக்கிறது.
பால்கன் நாடான கிரவேசியா மிக நீண்ட கடற்கரையை மத்தியதரைக் கடலுடன் எல்லையாகக் கொண்ட நாடு. சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் கிரவேசியா கொரோனாத்தொற்றுக் காலத்தின் பின்னர் மீண்டும் சுறுசுறுப்பாகி வருகிறது. அதன் பக்க விளைவாக ஐரோப்பாவின் மற்றைய முக்கிய சுற்றுலா மையங்களான பிரான்ஸ், கிரீஸ், ஸ்பெய்ன் போலவே கிரவேசியாவும் தம்மிடம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான சேவைகளில் பணியாற்ற ஊழியர்கள் பற்றாக்குறையால் தவிக்கிறது. சுமார் 3.8 மில்லியன் மக்கள் கொண்ட கிரவேசியாவுக்கு 2019 இல் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 21 மில்லியன் பேராகும்.
கிரவேசியாவைப் பொறுத்தவரை இப்பிரச்சினை கொரோனாத்தொற்றுக் காலத்துக்கு முன்னரும் இருந்தாலும் வெளிநாட்டவர்களை அத்துறையில் ஊழியர்களாக்கிக்கொள்வது அங்கே வழக்கமாக இருக்கவில்லை. அதனால், அதன் தாக்குதல் திடீரென்று அதிகரித்துவிட்ட சுற்றுலாப் பயணிகள் தொகையால் அத்துறையினருக்குச் சவாலாகியிருக்கிறது. இவ்வருடம் அந்த நாடு 2019 ஐ விட அதிக சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்க்கிறது. இவ்வருடக் கோடையில் சுமார் 10,000 ஊழியர்களாவது பற்றாக்குறையாக இருப்பதாக நாட்டின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கிரவேசியா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்ததிலிருந்து அங்கிருந்து சுமார் 250,000 பேர் மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக ஊதியம் தரும் தொழில்களுக்குப் போய்விட்டார்கள். அவர்களில் ஒரு சாராரையாவது நாட்டுக்கு மீண்டும் ஈர்க்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்கிறது. அதேசமயம், பக்கத்து பால்கன் நாடுகள் முதல் ஆசிய நாடுகள் வரையிலிருந்து தொழிலாளர்களுக்காக வேட்டையாடுகிறது.
கடந்த வருடம் முதல் தடவையாக பால்கன், ஐரோப்பிய நாடுகள் தவிர்ந்த நாடுகளிலிருந்து ஊழியர்களைக் கொண்டுவருவதற்கான திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. இவ்வருட ஜூன் மாதம்வரை 51,000 விசாக்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்காக வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வருட இறுதிக்குள் அது இரண்டு மடங்காக அதிகமாகியிருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்