பார்ம்கேட் என்ற பெயரில் தென்னாபிரிக்க ஜனாதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள்.
தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா ஊழல்களில் ஈடுபட்டாரா என்பது பற்றிய கேள்விகள் அரசியல் சிக்கலொன்று ஆளும் கட்சியினரிடையேயான அதிகார இழுபறியாக வெளியாகியிருக்கிறது. அவருக்குச் சொந்தமான பண்ணையொன்றிலிருந்து பல மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணய நோட்டுக்கள் களவாடப்பட்டது என்ற விபரம் வெளியாகியதிலிருந்தே இந்த ஊழல் பற்றிய விபரங்கள் நாடெங்கும் எதிரொலிக்கின்றது.
நாட்டின் முன்னாள் பாதுகாப்புப் படையின் தலைவர் ஆர்தர் பிரேசர் ஜோகான்னஸ்போர்க் பொலீஸ் நிலையமொன்றில் கொடுத்திருக்கும் முறையீடு ரமபோசா மீதான ஊழல் கேள்விகளை ஆரம்பித்து வைத்தது. அந்த முறையீட்டில் பிரேசர், ‘ரமபோசாவின் பண்ணைக்குள் நுழைந்த திருடர்கள் சுமார் 4 மில்லியன் டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டு நோட்டுக்களைத் திருடியதாகக் குறிப்பிட்டார். திருடியவர்களைக் கைப்பற்றி அவர்களுக்குப் பணம் கொடுத்து அவர்களை அத்திருட்டு பற்றிய விபரங்களை வெளியிடாமல் ரமபோசா தடுத்து விட்டார். அந்தத் திருட்டு பற்றிய பொலீஸ் பதிவுகளும் இல்லாமல் மறைக்கப்பட்டன,’ என்கிறார்.
பிரேசர் தனது குற்றச்சாட்டுக்கு ஆதரவாகப் பொலீசாரால் எடுக்கப்பட பல படங்களையும் விபரங்களையும், ஆவணங்களையும் கையளித்திருக்கிறார். குறிப்பிட்ட கொள்ளையானது பெப்ரவரி 2020 இல் நடந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஊழல் குற்றங்களுக்காகப் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமாவின் நெருங்கிய ஆதரவாளர் பிரேசர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்ளை நடந்தது உண்மை என்று பெரும் சொத்துக்களுக்குச் சொந்தமான ரமபோசா ஒத்துக் கொண்டிருக்கிறார். குறிப்பிட்ட பணம் தனது வர்த்தக நடவடிக்கைகளால் பெறப்பட்டதாகக் குறிப்பிடும் அவர் அது அரச கஜானாவிலிருந்து களவாடப்படவில்லை என்கிறார். அதைத் தவிர வேறு விபரங்களை வெளியிட மறுக்கிறார் அவர். ‘அத்தொகை உண்மையிலேயே நியாமான முறையில் பெறப்பட்டிருப்பின் ஏன் அவற்றைப் பற்றி விபரங்களை அவர் வரித்திணைக்களம் போன்ற அதிகாரங்களுக்கு அறிவிக்கவில்லை,’ என்று கேள்வி எழுப்பப்படுகிறது.
சமீபத்தில் ஜேக்கப் ஸூமாவின் ஊழல்களில் சம்பந்தமுள்ளவர்களாகக் குற்றஞ்சாட்டப்பட்ட குப்தா சகோதரர்கள் எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டிருப்பதும் அவர்கள் தென்னாபிரிக்காவுக்குக் கையளிக்கப்பட இருப்பதும் கூட இவ்விபரத்துடன் சம்பந்தப்பட்டுப் பேசப்படுகிறது.
இவ்வருட இறுதியில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் முக்கிய பதவிகளுக்காகத் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. அப்படியான தேர்தலின்போது கட்சியினுள் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருப்பவர்கள் தம்மிடமிருக்கும் பதவிகளிலிருந்து விலகி மீண்டும் தேர்தலில் நிற்கவேண்டும் என்பது கட்சியின் விதியாகும். அதன்படி ரமபோசாவின் மீது கறுப்புப்பணக் கையாளல், வரி ஏய்ப்பு, நடந்த குற்றத்தை ஒளித்து வைத்தமை போன்ற குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கின்றன.
எனவே “பார்ம் கேட் (Farmgate) ஊழல்” நாட்டின் ஆளும் கட்சிக்குள் பெரும் மோதலொன்றை உருவாக்கவே வெளியிடப்பட்டிருக்கிறது. கட்சிக்குள் அதிகாரத்தை வைத்திருக்கும் வெவ்வேறு தலைவர்களிடையே நடக்கும் பலப்பரீட்சையே இது என்று பரவலாகப் பேசப்படுகிறது.
சாள்ஸ் ஜெ . போமன்