அமெரிக்க அப்பிள் நிறுவன ஊழியர்கள் முதல் தடவையாகத் தொழிலாளர் சங்கமொன்றில் இணைகிறார்கள்.
அமெரிக்காவின் மெரிலாண்ட் நகரில் அப்பிள் நிறுவனத்தில் வேலை செய்யும் சுமார் 100 பேர் நாட்டின் தொழில் சங்கமொன்றில் சேருகிறார்கள். அவர்களுடைய இந்த முடிவைச் சக தொழிலாளர்கள் முழுமனதுடன் ஆதரிப்பதாக அப்பிள் நிறுவனத்தின் நிர்வாகியான டிம் குக்குக்குக் கடிதமொன்றின் மூலம் தெரிவித்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் கடந்த கால் நூற்றாண்டுகளில் உருவாகிப் பெருமளவில் வெற்றி பெற்ற, இலாபம் கொட்டிக் கொடுக்கும் நிறுவனங்கள் பலவற்றின் ஊழியர்களுக்கு தொழில் சங்கங்களில் சேர அனுமதியில்லை. தமது உரிமைக்காகக் குரல் கொடுக்க, வேலைத்தளங்களில் நல்ல நிலைமை கோர முயல்பவர்களை நிர்வாகங்கள் தண்டிப்பது பற்றிப் பல தடவைகள் குரலெழுப்பப்பட்டிருக்கிறது. கடந்த மாதத்தில் அட்லாந்தாவில் அப்பிள் நிறுவன ஊழியர்கள் இதே நிலைமைக்கு ஆளாகித் தமது தொழில் சங்கத்தில் சேரும் முயற்சியைக் கடந்த மாதம் வாபஸ் வாங்கிக்கொண்டார்கள்.
ஆயினும், தொழில் சங்கங்களில் சேரும் ஆர்வம் அதிகரித்துச் சமீபத்தில் அமெஸான், ஸ்டார்பக் நிறுவன ஊழியர்கள் சிலர் ஆங்காங்கே வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
மெரிலாண்ட் நகர அப்பிள் ஊழியர்களின் தொழில் சங்கப் பிரவேசத்தைத் தொழிற்சங்கங்கள் வரவேற்றிருக்கின்றன. அப்பிள் நிர்வாகம் அதுபற்றிச் சொல்லத் தம்மிடம் எந்தக் கருத்தும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்