எரிசக்திக்காக மீண்டும் நிலக்கரியைப் பாவிக்கும் நாடுகளாக ஜேர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்து.
ரஷ்ய – உக்ரேன் போரின் விளைவாக ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்க மறுத்துவரும் ஐரோப்பிய நாடுகள் தமது தேவைக்கான எரிசக்தியைப் பெறுவதில் இடைஞ்சல்களை எதிர்கொண்டு வருகின்றன. அதனால் ஆஸ்திரியா, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் மீண்டும் நிலக்கரியை எரித்துத் தமக்கு வேண்டிய சக்தியைப் பெற ஆரம்பித்திருக்கின்றன.
படிம எரிபொருட்களை எரிசக்திக்காகப் பாவிப்பதை நிறுத்தும் முடிவை எடுத்திருந்த ஜேர்மனியும், ஆஸ்திரியாவும் ஞாயிறன்று அதை மாற்றிக்கொண்டதாக அறிவித்தன. திங்களன்று அதே முடிவை நெதர்லாந்தும் எடுத்திருக்கிறது. படிம எரிபொருட்கள் மீதான தடைகளை முற்றாக நீக்கவிருப்பதாக நெதர்லாந்து தெரிவித்திருக்கிறது.
உலகின் காலநிலை மாற்றங்களைத் தடுக்கவேண்டிய அவசியமான நிலையில் கரியமிலவாயுவை வெளியேற்றும் நிலக்கரியை மீண்டும் பாவிக்கவேண்டியிருப்பதை இந்த நாடுகள் விசனத்துடன் குறிப்பிடுகின்றன. எப்படியாயினும் 2030 இன் முன்னர் தாம் அப்பாவிப்பை முற்றாக நிறுத்திவிடுவதாக முன்னர் எடுத்த முடிவை மாற்றப்போவதில்லை என்று ஜேர்மனி தெரிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்