எத்தியோப்பியாவில் 200 க்கும் அதிகமான அம்ஹாரா இன மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
முன்பும் பல தடவைகள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட எத்தியோப்பியாவின் அம்ஹாரா இன மக்கள் 200 க்கும் அதிகமானோர் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஞாயிறன்று எத்தியோப்பிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட இந்தச் செய்தி சர்வதேச ஊடகங்களில் இன்று பரவியிருக்கிறது. பல இனங்களைக் கொண்ட எத்தியோப்பியாவில் இரண்டாவது [27%] அதிக பெரும்பான்மையினர் அம்ஹாரா இந்த்தவராகும்.
நாட்டின் சுமார் 34 % பெரும்பான்மையினரான ஒரோமோ மக்களின் தனி நாட்டுப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் குழுவான ஒரோமோ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்களே அந்தக் கொலைகளைச் செய்ததாக அரசு சுட்டிக் காட்டுகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களோ கொலைகளை அரசின் படைகளே செய்துவிட்டுத் தம்மைக் குற்றஞ்சாட்டுவதாகக் குறிப்பிடுகிறார்கள். ஒரோமோ விடுதலை இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமாக எத்தியோப்பிய அரசால் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.
அரச படைகள் குறிப்பிட்ட தாக்குதல் நடந்த இடத்துக்கு வந்த பின்னர் அங்கே சகஜ நிலை திரும்பியிருப்பதாக சில சாட்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர்கள் அங்கிருந்து விலகினால் மீண்டும் இனக்கலவரம் எழும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்படுகிறது. அம்ஹாரா இனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவது இது முதல் தடவையல்ல. ஆனால், இதுபோன்ற மோசமான தாக்குதல்களை அவர்கள் நீண்டகாலமாகச் சந்தித்திருக்கவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்