பல்கேரியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட அரசு வீழ்த்தப்பட்டது.
புதன் கிழமையன்று மாலையில் பல்கேரியப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றியடைந்ததால் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. அரசுக்கு எதிராக மேலதிகமாக ஆறு பேர் வாக்களித்திருந்தார்கள். இதனால் பல்கேரியாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
ஆளும் அரசு நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்காகப் பேணவில்லை என்பதால் மிக அதிகமான அளவில் பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாட்டு மக்களுக்கு அவசியமான பொருட்களின் விலைகள் கணிசமான அளவில் உயர்ந்திருக்கின்றன. அதற்குக் காரணம் அரசின் கையாலாகாத்தனமே என்று முன்னர் ஆட்சியிலிருந்து, தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சியினர் குற்றம் சாட்டி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தார்கள்.
பிரதமராக இருந்த கிரில் பெட்கோவ் அரசு நீண்ட காலமாக இழுபறியில் இருந்த வட மக்கடோனியாவின் ஐரோப்பிய ஒன்றிய இணைதல் பற்றிய பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அதனால் அவரது கட்சிக்கு ஆட்சியமைக்க மிண்டு கொடுத்திருந்த சிறிய கட்சியொன்று தனது ஆதரவை மறுத்ததாலேயே இந்த நிலைமை உண்டாகியது. பல்கேரியர்களின் தேசிய உணர்வை அசட்டைசெய்ததாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
ரஷ்யாவிடமிருந்து மலிவான விலைக்கு எரிவாயுவை வாங்கிவந்த நாடு பல்கேரியா. நாட்டு மக்களின் முக்கிய தேவையான எரிசக்தியின் விலை அதிகமாகாமல் இருக்க அது நீண்ட காலமாக உதவியிருந்தது. உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவை எதிர்த்தால் அந்தச் சலுகை ரஷ்யாவால் மறுக்கப்பட்டது. விளைவாக நாட்டின் பொருளாதாரம் பெரும் அடி வாங்கியிருக்கிறது. மக்களுடைய அன்றாடத் தேவைக்கான பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன.
பெட்கோவ் மீண்டும் பாராளுமன்றத்தில் ஆதரவு பெற்று புதிய அரசை உருவாக்கலாம். இல்லையேல், நாட்டில் மீண்டுமொரு தேர்தல் நடக்க வாய்ப்புண்டு. அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் மக்கள் தமது வாழ்க்கைச் செலவைக் குறைக்க எண்ணி ரஷ்யாவை ஆதரிக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்