டொம்பாஸின் ஒரு பாகத்தைக் கைப்பற்றிவிட்ட ரஷ்யா மறுபாகத்தைப் பிடிக்கத் தயாராகிறது.
உக்ரேனின் ஒரு பாகமான டொம்பாஸ் பிராந்தியத்தின் இரண்டு குடியரசுகளில் ஒன்றான லுகான்ஸ்க் முழுவதுமாக ரஷ்யாவின் கையில் வீழ்ந்திருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. ரஷ்யாவுடன் சேர்ந்துகொள்ளவேண்டும் என்று வாக்களித்த அந்தக் குடியரசைக் கைப்பற்றியதற்காக ரஷ்ய ஜனாதிபதி இராணுவத்தினரைப் பாராட்டினார்.
“எங்களுடைய போர்த்தந்திரோபாயத்தாலும், கிடைத்திருக்கும் நவீன ஆயுதங்களின் உதவியாலும் இழந்த பிராந்தியங்களைக் கைப்பற்றுவோம்,” என்று சூழுரைத்திருக்கிறார் உக்ரேன் ஜனாதிபதி. லுகான்ஸ்க் குடியரசின் Lysychansk நகரில் சமீப நாட்களில் இரு தரப்பாருக்கும் கொடூரமான போர் ஏற்பட்டிருந்தது. அங்கே ரஷ்யர்களின் கை ஓங்கியதால் தமது வீரர்களைப் பின்வாங்கச் சொல்லி உத்தரவிட்டது சரியானது என்று ஜனாதிபதி செலென்ஸ்கி குறிப்பிட்டார். “எங்கள் போர்வீரர்களில் உயிரும், பாதுகாப்பும் நாட்டின் நிலப்பகுதிக்கு ஈடானதே. நாம் எல்லைகளைக் கட்டியெழுப்பி மீண்டும் இழந்த பகுதியைக் கைப்பற்றுவோம். நிலத்தை விட மக்களின் உயிர் முக்கியமானது,” என்று அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யா தனது தாக்குதலை சமீப நாட்களில் டொனெட்ஸ்க் குடியரசை நோக்கித் திருப்பியிருப்பதாக அப்பிராந்தியத்துக்குப் பொறுப்பான பவுலோ கிரிலென்கோ தெரிவித்தார். ரஷ்யா அங்கே குண்டு மழை பொழிந்து கட்டடங்களையும் முக்கிய இணைப்புச் சந்திகளையும் தகர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டார். ஸ்லோவியான்ஸ்க் என்ற நகரை நோக்கி ரஷ்ய இராணுவம் குறிவைக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. 2014 இல் ரஷ்யர்களால் உக்ரேனிடமிருந்து கைப்பற்றப்பட்ட அப்பகுதியை உக்ரேன் மீண்டும் கைப்பற்றியிருந்தது. எனவே, அதைக் கைவசப்படுத்துவது ரஷ்யாவுக்கு முக்கியமாகலாம்.
டொம்பாஸ் பகுதிகளில் போர் உக்கிரமாக நடந்துவரும் இதே சமயத்தில் உக்ரேனைக் கட்டியெழுப்புதல் பற்றிய திட்டங்கள் நடந்து வருகின்றன. ரஷ்யர்களால் தகர்க்கப்பட்டவைகளை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 750 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவி தேவை என்று கணிக்கப்படுகிறது. திங்களன்று சுவிஸில் ஆரம்பித்த மாநாடு ஒன்றில் உதவியமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் சந்தித்து உக்ரேனை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டங்கள் பற்றி விவாதித்து வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்