“நாம் போடும் விதிமுறைகளுக்கு உட்படுங்கள், இல்லையேல் மோசமான அழிவுக்குத் தயாராகுங்கள்,” என்கிறார் புத்தின்.
வியாழனன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி புத்தின் உக்ரேனுக்குத் தனது எச்சரிக்கையை முன்வைத்தார். உடனடியாக ரஷ்யாவின் விதிமுறைகளுக்கு அடங்கி நடக்காவிடின் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும், என்று அவர் எச்சரித்தார். உக்ரேன் மீதான தமது போரின் ஆரம்பக்கட்டமே இதுவரை ஆகியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரேனின் கடைசிக் குடிமகன் இறக்கும்வரை மேற்கு நாடுகள் உக்ரேனைப் போருக்குத் தூண்டி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
“அவர்களுக்கு ரஷ்யா என்ற நாடு இருக்கவே கூடாது என்று நோக்கம் இருக்கிறது. அதனால் தான் தீவிரவாதம், உள் நாட்டில் பிளவுகள் தூண்டல், தனிமைப்படுத்தல் ஆகியவற்றால் எங்களை ஒடுக்க முயல்கிறார்கள். மேற்கு நாடுகள் எங்கள் மீது திணிக்க முயலும் உலகளாவிய ஒழுங்கு என்ற கோட்பாடு என்றென்றும் வெல்லப்போவதில்லை,” என்றார் புத்தின்.
போரை நிறுத்துவதற்காக உக்ரேனுடன் பேச்சுவார்த்தைகளில் இறங்கத் தயார் என்று புத்தின் குறிப்பிட்டார். போர்க்களத்தில் தமது இராணுவத்தை வெல்வதாக அவர்கள் குறிப்பிடுவது நடக்காத காரியம் என்றார் அவர்.
பெப்ரவரி 24 இல் உக்ரேனுக்குள் ரஷ்யா நுழையும்போது ரஷ்யாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடாகவே உக்ரேன் இருக்கவேண்டும் என்றும் 2014 இல் ரஷ்யா கைப்பற்றிய கிரிமியாவை ரஷ்யாவுடையது என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி அறுதியாகக் குறிப்பிட்டிருந்தார். வியாழனன்று தனது உரையில் மேற்கு நாடுகள் உக்ரேனை ஆயுதமாகப் பாவித்து ரஷ்யாவை வீழ்த்த முயற்சிப்பதாக மீண்டும் குற்றஞ்சாட்டினார்.
உக்ரேனின் டொம்பாஸ் பிராந்தியத்தைக் குறிவைத்துத் தாக்கிவருகிறது ரஷ்யா. அதைத் தொடர்ந்து கருங்கடலில் உக்ரேனை வெளியேறவிடாமல் முடக்க ரஷ்யா முயற்சி செய்யும் என்று கணிக்கப்படுகிறது. அங்கு ருமேனியாவின் எல்லைவரை உக்ரேனை முடக்கினால் மோல்டோவாவின் தனிக் குடியரசான டிரான்ஸ்னிஸ்திரியாவுடன் ரஷ்யா ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு உண்டு. அங்கே ரஷ்யா தனது இராணுவ மையமொன்றை ஏற்கனவே கொண்டுள்ளது.
சாள்ஸ் ஜெ. போமன்