உக்ரேன் எல்லையில் ரஷ்ய இராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு. 11 பேர் பலியானார்கள்.

ரஷ்யாவின் பெல்கொரூட் நகரில் போருக்காகத் தயார் செய்யப்பட்டுவரும் ரஷ்ய இராணுவத்தினர் பயிற்சிசெய்துகொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. முன்னாள் சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த குடியரசு ஒன்றின் குடிமக்களான இருவரே அத்தாக்குதலை நடத்தியதாகவும் 11 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ரஷ்யச் செய்திகள் குறிப்பிடுகின்றன. மேலும் 15 இராணுவ வீரர்கள் காயமடைந்திருக்கிறார்கள்.

ரஷ்யாவின் ஜனாதிபதி நாட்டின் இராணுவத்தினரில் போர் புரிவதற்குத் தயாராக மேலும் 300,000 பேரைத் தயார் செய்யும்படி உத்தரவிட்ட பின்னரே இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. போர்ப்பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தவர்கள் தாமே விரும்பி ரஷ்ய இராணுவத்தின் போரில் ஈடுபட வந்தவர்கள் என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சின் செய்தி தெரிவிக்கிறது. 

மத்திய ஆசியாவைச் சேர்ந்த தாஜிக்கிஸ்தானிலிருந்து வந்த இருவரே ரஷ்ய இராணுவத்தினர் மீது தாக்கியிருக்கிறார்கள். அவர்களை ரஷ்ய இராணுவத்தினர் சுட்டுக் கொன்றுவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. 

பெருமளவில் முஸ்லீம் மக்களைக் கொண்ட தாஜிக்கிஸ்தானில் வெவ்வேறு கிறீஸ்தவ மார்க்கத்தினரும் வாழ்கிறார்கள். சோவியத் யூனியனிலிருந்து விடுதலை பெற்றுத் தனி நாடுகளாகியிருக்கும் மத்திய ஆசிய நாடுகளில் உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் அதிருப்தியை உண்டாக்கியிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. புத்தின் உக்ரேனைக் கையகப்படுத்திவிட்டுத் தமது நாடுகளைத் தாக்கி ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ளலாம் என்ற கிலி அந்த நாடுகளில் பரவியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *