இலங்கை அரசியல் பரப்பை பேரளவில் மாற்றிவிட்ட 100 நாட்கள்
எழுதுவது ♦வீரகத்தி தனபாலசிங்கம்
கொழும்பு காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலக முற்றுகை மக்கள் கிளர்ச்சி இன்று 100 நாட்களை நிறைவு செய்கிறது. இந்த 100 நாட்களிலும் நடந்தேறியவை சகலதும் இலங்கைக்கு புதியவை.
நான்கு மாதங்களுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட நிவாரணம் கேட்டு வீதியில் இறங்கி மக்கள் செய்யத்தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் நாளடைவில் முக்கியமான அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் கிளர்ச்சியாக மாறி அரசியல் புரட்சியொன்றின் பரிமாணங்களை எடுத்தது.அதன் உலகறிந்த சின்னமாக காலிமுகத்திடல் ‘ கோட்டா கோ கம ‘ கிராமம் விளங்குகிறது.
ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவும் அரசாங்கமும் பதவி விலகவேண்டும் ; ராஜபக்சாக்கள் அரசியலில் இருந்து வெளியேறவேண்டும் ; புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டு முறைமை மாற்றம் செய்யப்படவேண்டும் என்ற பிரதான கோரிக்கைகளை வலியுறுத்திய மக்கள் கிளர்ச்சி அதன் முதல் இலக்குகளை படிப்படியாக அடைந்து 92 வது ( ஜூலை 9) தினத்தில் மிக முக்கியமான வெற்றியைச் சாதித்ததை காணக்கூடியதாக இருந்தது.
ஜூலை 9 எரிபொருள் தட்டுப்பாட்டின் விவைான போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டின் நாலாபகுதிகளில் இருந்தும் கொழும்பில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றி இலங்கை வரலாறு காணாத ‘ நாடக பாணி நிகழ்வை ‘ அரங்கேற்றினார்கள்.அடுத்து ஜனாதிபதி செயலகமும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையும் பிரதமரின் அலுவலகமும் கூட மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.
முன்கூட்டியே ஜனாதிபதி தனது பரிவாரங்களுடன் மாளிகையில் இருந்துவெளியேறிவிட்டார்.தேசிய பாதுகாப்பை பிரதான சுலோகமாக முன்வைத்து ஆட்சியதிகாரத்துக்கு வந்த ஒரு ஜனாதிபதி தனக்கே பாதுகாப்பில்லாத நிலையில் எங்கோ மறைந்திருந்து பின்னர் நாட்டை விட்டு தப்பியோட வேண்டியேற்பட்டது.
ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் அரபுநாடுகளின் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி ‘ அரபு வசந்தம் ‘ என்று அழைக்கப்படுகிறது. அந்த வசந்தத்தை எல்லாம் புரட்டிப்போடுகின்ற வகையில் இலங்கை மக்கள் தங்களுக்கென்று தனியான வசந்தத்தை முன்னெடுத்தார்கள்.எமது தெற்காசிய பிராந்தியத்தில் இது போன்று — அரசியல் அதிகார வர்க்கத்தை உலுக்கிய மாபெரும் மக்கள் கிளர்ச்சி வேறு எங்கும் இடம்பெற்றதில்லை..
மக்கள் கிளர்ச்சியினால் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட இலங்கையின் முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ; பதவிக்காலத்தின் இடைநடுவில் பதவி விலகிய ஜனாதிபதி ; நாட்டை விட்டு தப்பியோடிய முதல் ஜனாதிபதி என்றெல்லாம் கோதாபய வரலாற்றில் பதிவாகப்போகிறார்.தோல்வி கண்ட ஜனாதிபதியாக பதவியில் இருந்து விலக விரும்பவில்லை என்று கூறியவர் அதை விடவும் கேவலமான அவமதிப்புடன் விரட்டப்பட்டு தஞ்சம் அடைவதற்கு நாடுகளை தேடிக்கொண்டிருக்கும் பரிதாபநிலை.
ராஜபக்சாக்களில் எவருமே இன்று ஆட்சியதிகார பதவிகளில் இல்லை. மக்கள் கிளர்ச்சியின் நெருக்குதல் காரணமாக ஏப்ரில் 4 அமைச்சரவை பதவி விலகியபோது அமைச்சர்களாக இருந்த ராஜபக்சாக்கள் சகலரும் பதவிகளை இழந்தனர்.மே 9 அலரிமாளிகையில் இருந்து தனது ஆதரவாளர்களையும் குண்டர்களையும் கட்டவிழ்த்துவிட்டு கோட்டா கோ கம அமைதிவழி போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்திய மகிந்த ராஜபக்ச அதற்கு எதிர்வினையாக அன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளிலும் மூண்ட மோசமான வன்முறைகளுக்கு மத்தியில் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
ஜூன் 9 நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடியின் சூத்திரதாரிகளில் ஒருவரான முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.ஜூலை 9 கோதாபய பதவி விலகாமலேயே நாட்டை விட்டு தப்பியோடி இறுதியில் சிங்கப்பூரில் இருந்துகொண்டு பாராளுமன்ற சபாநாயகருக்கு தனது பதவிவிலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார்.அவர் இலங்கையிலேயே தொடர்ந்து இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தால் பதவியைத் துறந்திருக்கமாட்டார் ; தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் அச்சம் கொண்டிருந்தார் என்று மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற சபாநாயகருமான முஹமட் நஷீட் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
கொழும்பில் இருந்து வெளியேறி மாலைதீவைச் சென்றடைந்த பின்னர் கோதாபய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காக நியமித்தார். அவரின் பதவி விலகல் கடிதம் உறுதிப்படுத்தப்பட்டு சபாநாயகர் முறைப்படியாக அது குறித்து நாட்டுக்கு அறிவித்த பின்னர் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக வெள்ளியன்று பதவியேற்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
இலங்கையின் வரலாற்றில் அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதியொருவர் பதவி விலகியதையடுத்து அந்த பதவி காலியாகியிருப்பது இதுவே முதற்தடவையாகும்.ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 1993 மேதினத்தன்று கொழும்பில் தற்கொலைக்குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டபோது பிரதமராக இருந்த டி.பி. விஜேதுங்க அன்றைய தினமே ஜனாதிபதியாக பதவியேற்றார். 7 நாட்களுக்குள் கூடிய பாராளுமன்றம் அவரது பதவியை ஏகமனதாக அங்கீகரித்தது. ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்பட்ட பலர் அன்று இருந்தபோதிலும், பிரேமதாச கொலையை அடுத்த நெருக்கடியான சூழ்நிலையில் எவரும் அந்த பதவிக்கு போட்டியிட்டு பாராளுமன்றத்தில் ஒரு தேர்தலுக்கு வழிவகுக்க விரும்பவில்லை.
ஆனால், இத்தடவை பாராளுமன்றம் புதிய ஜனாதிபதியொருவரை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யவிருக்கிறது. எதிர்வரும் புதன்கிழமை (ஜூலை 20 ) தேர்தல் நடைபெறும் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதுவரைக்கும் காத்திராமல் சாத்தியமானளவு விரைவாக புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்யுமாறு சில சிவில் சமூக அமைப்புகள் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தன.இந்த கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருந்த தருணம் வரை தேர்தல் திகதி குறித்து மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
புதிதாக தெரிவுசெய்யப்படக்கூடிய ஜனாதிபதி இலங்கையில் பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படுகின்ற முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருப்பார். இந்த தேர்தல் மக்கள் கிளர்ச்சியின் விளைவாக நாட்டின் அரசியல் அகல்பரப்பில் ஏற்பட்டிருக்கும் பேரளவிலான மாற்றத்துக்கு மத்தியில் இடம்பெறவிருக்கிறது.தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் வீட்டுக்குப் போகவேண்டும் என்று கேட்கும் மக்கள் கிளர்ச்சி (அறகலய)போராட்டக்காரர்கள் தெரிவுசெய்யப்படவிருக்கின்ற ஜனாதிபதி தொடர்பில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்கள் என்பது அடுத்து வரும் நிகழ்வுப்போக்குகளை தீர்மானிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவை மாத்திரமல்ல, பிரதமர் விக்கிரமசிங்கவையும் பதவி விலகவேண்டும் என்றே போராட்டக்காரர்கள் வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள்.அவர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கூட அவர் விலகவேண்டும் என்ற கோரிக்கை தணியவில்லை. அவரும் அரசியலமைப்பை மீறுகின்ற எந்தச் செயலையும் அனுமதிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். பதில் ஜனாதிபதி என்ற முறையில் நாட்டு மக்களுக்கு முதல் முறையாக உரையாற்றிய விக்கிரமசிங்க ஜனாதிபதியின் அதிகாரங்களை கணிசமானளவுக்கு குறைத்த 19 வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக மீண்டும் கொண்டுவருவதாக உறுதியளித்திருக்கிறார்.
அத்துடன் ஜனாதிபதிக்கு என்று தனியான கொடி தேவையில்லை ; தேசியக்கொடியே போதுமானது ; ஜனாதிபதியை இனிமேல் ‘ அதிமேதகு ‘என்று விளிக்கத்தேவையில்லை என்று விக்கிரமசிங்க அறிவித்தததையும் காணக்கூடியதாக இருந்தது.அரசியல் வர்க்கத்தை நாட்டு மக்கள் எந்தளவுக்கு அவமதிப்பாக நோக்குகிறார்கள் என்ற புரிதல் அவருக்கு ஏற்பட்டிருப்பதை இது வெளிக்காட்டுகிறது.
இதுவரையில் வெளியாகியிருக்கும் தகவல்களின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் மும்முனைப் போட்டியாக அமையும் என்றே தெரிகிறது. பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரே போட்டியிடவிருப்பதாக கூறப்படுகிறது.
117 உறுப்பினர்களைக் கொண்ட பொதுஜன பெரமுன பாராளுமன்றக்குழு விக்கிரமசிங்கவை ஆதரிக்கத் தீர்மானித்திருப்பதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் வெள்ளியன்று அறிவித்தார்.இரகசிய வாக்கெடுப்பு என்பதால் இன்றைய அரசியற் குழப்பம் நிறைந்த சூழ்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையில் வாக்குகள் எவ்வாறு பிரிவடையும் என்பதை முன்னுணர்ந்து கொள்வது மிகவும் கஷ்டமானதாகும்.
எது எவ்வாறிருந்தாலும், புதிய ஜனாதிபதி இதுகாலவரையில் எந்தவொரு இலங்கை ஜனாதிபதியும் எதிர்நோக்கியிராத பாரதூரமான சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியவராக இருக்கப்போகிறார்.முன்னையவர்களைப் போலன்றி மக்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றி ஒவ்வொரு கணமும் சிந்தித்து தனது அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் தீர்மானிக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்படும்.
பழைய மாதிரி அரசியல் செய்வதற்கு இடமளிக்கக்கூடியதாக தற்போதைய சூழ்நிலை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். புதிய ஆட்சியாளர்கள் எவராயினும் அரசியல் விழிப்புணர்வும் எச்சரிக்கையும் கொண்ட குடிமக்களின் உன்னிப்பான அவதானிப்பின் கீழேயே செயற்படவேண்டியிருக்கும்.சுருக்கமாக சொல்வதானால் ராஜபக்சாக்களின் வீழ்ச்சிக்கு பின்னரான இலங்கையில் வழமையான அரசியலுக்கு இடமிருக்கப்போவதில்லை.எந்த நேரத்திலும் மக்கள் சக்தி வீதிகளில் இறங்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
கடந்த நான்கு மாதங்களும் இலங்கை மக்களை பெருமளவுக்கு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு கூருணர்வு கொண்டவர்களாக அரசியல்மயப்படுத்தியிருக்கிறது.தேர்தல்களில் அளிக்கும் வாக்குறுதிகளை வெற்றிபெற்ற பிறகு காற்றில் பறக்கவிடும் அரசியல் கலாசாரத்துக்கு இனிமேல் போதுமான வாய்ப்புகள் இருக்காது.மக்கள் சக்தி அரசியல்வாதிகள் மத்தியில் கடுமையான பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.அடுத் தேர்தலில் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் போட்டியிட முன்வருவார்களோ தெரியவில்லை.
சில அரசியல் அவதானிகளின் அபிப்பிராயப்படி பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் பெற்றிபெறக்கூடிய வாய்ப்பு பலமாக இருக்கிறது.தவிர்க்கமுடியாத வகையில் அவர் ராஜபக்சாக்களின் நலன்களைப் பாதுகாப்பவராக அடையாளப்படுத்தப்பட்டு நிற்கிறார். அதனால் அவர் தெரிவாகும் பட்சத்தில் ‘ அறகலய ‘ வின் இரண்டாம் கட்டம் தொடங்குவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் சில அவதானிகள் கூறுகிறார்கள்.
கோதாபயவை பதவியில் இருந்துவிரட்டும் வரை காலிமுகத்திடலை விட்டுப் போகமாட்டோம் என்று சூளுரைத்த போராட்டக்காரர்கள் அவர் நாட்டை விட்டு தப்பியோடிய பின்னரும் அங்கே தொடர்ந்து முகாமிட்டிருக்கிறார்கள்.ஜனாதிபதி தெரிவின் பின்னர் அவர்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பார்கள் எனபது முக்கியமான ஒரு கேள்வி. விக்கிரமசிங்க தெரிந்தெடுக்கப்படுவாரேயானால் அவரது அரசாங்கம் ராஜபக்சாக்களின் ஆட்சியின் தொடர்ச்சியாகவே இருக்கும் என்றுபோராட்டக்காரர்கள் மத்தியில் பரவலாக அபிப்பிராயம் இருக்கிறது.
இத்தகையதொரு பின்புலத்தில், இலங்கையின் முன்னணி அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஜயதேவ உயன்கொட கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் முக்கியமான ஆங்கில தினசரிகளில் ஒன்றான ‘ த இந்து ‘ வில் எழுதிய கட்டுரையொன்றின் முடிவில் தெரிவித்த கருத்தை நோக்குவது பொருத்தமானதாக இருக்கும்.
” விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவானால் வேறுபட்ட பெயரில் ராஜபக்சாக்களின் ஆட்சியே தொடரும் என்று கருதப்படக்கூடிய சூழ்நிலையில் புதிய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி மூளக்கூடிய சாத்தியம் இருக்கிறது.இரண்டு அதிகார மையங்களுக்கு இடையிலான மோதலாக அது உருவெடுக்கலாம்.அதாவது பாராளுமன்றமும் ஜனாதிபதியும் ஒரு மையம் ; கொழும்பு காலிமுகத்திடலை தளமாகக்கொண்ட மக்கள் கிளர்ச்சி மற்றைய அதிகார மையம்.
” இந்த புதிய கட்ட மோதல் அரசியல் அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வுகாண்பதை நோக்கி பெரும்பாலும் திருப்பப்படலாம். அரசியல் அதிகாரம் என்பது எல்லா வேளைகளிலும் சமாதான வழிமுறைகளின் மூலமாக தீர்க்கப்பட்டுவந்த ஒரு பிரச்சினையல்ல என்பதை வரலாறு கூறுகிறது”.
( நன்றி ;ஈழநாடு,யாழ்ப்பாணம் )