பிரிட்டிஷ் ஓட்டப்பந்தய வீரர் மூ பாரா, தான் குழந்தையாக நாட்டினுள் கடத்தப்பட்டு வந்ததாக வெளிப்படுத்தினார்.

பிரிட்டனுக்காக நான்கு ஒலிம்பிக் கோப்பைகளை வென்ற முஹம்மது பாரா வெளிப்படுத்தியிருக்கும் விடயம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எட்டு வயதில் தான் நாட்டுக்குள் கடத்தப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்ட அவர் 12 வயது வரை நான் பாடசாலைக்கு அனுப்பப்படாமல் தன்னைக் கடத்திவந்த பெண்ணின் வீட்டில் அவளது பிள்ளைகளுக்கு வேலையாளாக நடத்தப்பட்டதாகக் கூறினார்.

5,000, 10,000 மீற்றர் தூரத்துக்கான ஓட்டப்பந்தயங்களில் வென்றவர் முஹம்மது பாரா. அவர் தனது பெயர் ஹுசெய்ன் அப்தி காஹின் என்றும் தான் சோமாலியாவின் ஒரு பகுதியான சோமாலிலாந்தில் பிறந்ததாகவும் தெரிவித்தார். தற்போது 39 வயதான அவர் தன்னைக் கடத்திவந்த பெண் அதற்காகப் போலிப் பிறப்புச் சான்றிதழ் உட்பட்ட பத்திரங்களைத் தயாரித்திருந்ததாகக் கூறினார்.

1993 இல் தனது பெற்றோருடன் சோமாலியிலிருந்து பிரிட்டனுக்கு அகதியாகப் புலம்பெயர்ந்ததாக இதுவரை குறிப்பிட்டு வந்த முஹம்மது பாரா அது பொய்யென்றும் தனது பெற்றோருடன் தான் பிரிட்டனுக்கு வரவில்லை என்றார். 2017 இல் மகாராணியால் பிரபு பட்டம் பெற்றுக்கொண்ட மூ பாரா தான் பிரிட்டனுக்காக ஒலிம்பிக் பந்தயங்களில் போட்டியிட்டது பற்றிப் பெருமைப்படுவதாகவும் பி.பி.சி பேட்டியொன்றில் குறிப்பிட்டார். 

தனக்கு பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுத்தர உதவியவர் தனது பாடசாலை ஆசிரியரே என்பதையும் அவர் வெளிப்படுத்தினார். அவர் மீது எந்த வித வழக்குகளையும் ஆரம்பிக்கப் போவதில்லை என்று பிரிட்டிஷ் அரசு குறிப்பிட்டிருக்கிறது. அவர் குறிப்பிட்ட விபரங்களை வைத்துத் தாம் ஆராய்வு ஒன்றை ஆரம்பித்திருப்பதாக லண்டன் மாநகர பொலீஸ் அதிபர் தெரிவித்தார். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *