மூன்று வேட்பாளர்களில் எவர் இன்று சிறீலங்காவின் ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்படுவார்?

சிறீலங்கா பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் [SLPP] சேர்ந்த டுல்லாஸ் அளகபெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் அனுரா குமார திசநாயக்காவும் நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கேயை எதிர்த்து இன்று பாராளுமன்றத்தில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். 44 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக சிறீலங்கா பாராளுமன்ற உறுப்பினர்கள் இரகசிய வாக்களிப்பின் மூலம் ஒருவரை  ஜனாதிபதியாக இன்று ஜூலை 20 திகதி தேர்ந்தெடுப்பார்கள்.

ஆளும் கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் அக்கட்சியின் உத்தியோகபூர்வமான நிலைப்பாட்டுக்கு எதிராக அளகப்பெருமாவை ஜனாதிபதியாகவும் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாசாவைப் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கவிருப்பதாகச் சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் சில ஊடகங்களும் அரசியல் கணிப்பாளர்களும் விக்கிரமசிங்கேவுக்கே பெரும்பாலான ஆளும் கட்சியினர் வாக்களித்து அரசியலில், நாட்டின் இயல்பு நிலையில் ஏற்பட்டிருக்கும் மோசமான நிலை தொடர்வதைத் தவிர்ப்பார்கள் என்று எழுதி வருகிறார்கள்.

2020 தேர்தலில் [SLPP] கட்சியினர்145 இடங்களைப் பிடித்து 225 பாராளுமன்ற இடங்களில் அதிபெரும்பான்மையாகினார்கள். அவர்களிடையே ஏற்பட்ட பிளவுகளால் 52 பேர் தனியாகப் பிரிந்தனர். பின்னர் அவர்களில் நால்வர் தாய்க்கட்சியுடன் சேர்ந்து 97 இடங்களைத் தமது கையிருப்பில் வைத்திருக்கிறார்கள். 

பாராளுமன்றத்தில் ஒரேயொரு இடத்தையே கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் விக்கிரமசிங்கே வெல்வதானால் குறிப்பிட்ட 97 பேரின் ஆதரவைப் பெறுவதுடன் மற்றைய கட்சிகளிலிருந்து 16 பேரின் ஆதரவையும் பெற்று 116 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். தமிழர்களின் கட்சியிலிருந்து 9 பேரும், பிரேமதாசாவின் கட்சியிலிருந்து தனக்கு ஆதரவான சிலரின் வாக்குகளைப் பெறுவதன் மூலமாகவே விக்கிரமசிங்கே வெல்ல முடியும். பிரேமதாசாவின் கட்சியினரிடம் 50 வாக்குகள் இருக்கின்றன.

ஆளும் கட்சியினர் உட்படச் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் நாட்டு மக்களிடமிருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. பல ஆளும் கட்சி உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு அவர்களின் உயிருக்கு எச்சரிக்கைகள் விடப்பட்டிருப்பதாகச் சபாநாயகர் தெரிவித்திருக்கிறார். தனிப்பட்ட பயத்தால் அவர்கள் விக்கிரமசிங்கேயை ஆதரிப்பதன் மூலம் தமக்குப் பாதுகாப்புக் கிடைக்கலாம் என்ற நிலைமையில் அவர்கள் அவரை இரகசியமாக ஆதரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

வெற்றிபெறும் ஜனாதிபதி நாட்டை விட்டோடிய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்ட காலமான நவம்பர் 2024 வரை பதவி வகிப்பார். அரசியல் உணர்வுகள் கொந்தளித்திருக்கும் நாடெங்கும் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கெதிராக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்களைக் கைது செய்ய, நடவடிக்கைகளெடுக்கத் தயாராயிருப்பதாகப் பொலீசாரும், இராணுவத்தினரும் தெரிவிக்கின்றனர்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *