கனடா தேசமும் பழங்குடியினர் துயரமும் – கட்டுரை 2

கட்டுரை பகுதி ஒன்றில் கனடாவில் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டு காலமாக  கிறிஸ்தவ அமைப்புகள், மற்றும் அரசினால் நடாத்தப்பட்ட வதிவிடப் பாடசாலைகள், அவற்றின் மூலம் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு, மற்றும் பழங்குடிச் சிறுவர்கள் மேல் நிகழ்த்தப்பட்ட துஸ்பிரயோகம், இழைக்கப்பட்ட அநீதி என்பவற்றைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்தோம். இந்தப் பதிவில் ஏனைய சில பிரச்சனைகளைப் பற்றிப் பேசலாம்.

 காணாமலாக்கப்பட்ட, கொல்லப்பட்ட பழங்குடிப் பெண்களும் சிறுமிகளும்

கனடாவைப் பொறுத்தவரையில் பழங்குடியின இளம் பெண்கள் தொடர்ச்சியாக கடத்தப்படுவதும்  காணாமல் செய்யப்படுவதும் கடந்த சில தசாப்தங்களாக தொடர்ந்து நடைபெறும் ஒரு அவலமாக இருந்து வருகிறது. கனடிய பொலிசாரின் (Royal Canadian Mounted Police) தரவுகளின்படி 1980 இலிருந்து 2012 வரை 1200 பழங்குடிப் பெண்களும் சிறுமியரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது காணாமல் போயிருக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. (ஆனால் இது உண்மையான எண்ணிக்கையைவிட குறைவானது என்று அவர்களுக்காக வாதிடுவோர் கூறுகிறார்கள்).

 அதேநேரம், கனடிய நீதித்துறையின் தகவல்களின்படி இவ்வாறு கொல்லப்பட்ட பழங்குடிப் பெண்களில் 50 வீதமான பெண்கள் அவர்களின் உறவினர்களாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இவ்வாறு பெண்கள் நெருங்கிய உறவினர்களாலேயே கொல்லப்படுவது அனைத்து சமூகங்களிலும் நிகழும் விடயமாகத் தோன்றும்.

 ஆனால் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம், கனடாவில் வருடாந்தம் கொலை செய்யப்படும் பழங்குடிப் பெண்களின் எண்ணிக்கை கொலை செய்யப்படும் பழங்குடி அல்லாத பெண்களின் எண்ணிக்கையைவிட ஐந்திலிருந்து எழு மடங்கு அதிகம் என்பதுதான். அதுமட்டுமன்றி, சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைப்படி பல பழங்குடிப் பெண்களின் கொலைகள் விபத்து மரணங்களாக பதியப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. அதேபோல பல சந்தேகத்துக்குரிய மரணங்கள் முறையாக விசாரிக்கப்பட்டு அறிக்கைப்படுத்தப்படவில்லை. மேலும், போலீசார் பல கொலைச் சம்பவங்களில் இறந்தவர் பழங்குடியினரா இல்லையா என்பதை முறையாக அறிக்கப்படுத்தாமையினால் உண்மையில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட பழங்குடிப் பெண்களின் எண்ணிக்கை அரசு சொல்லும் எண்ணிக்கையைவிட அதிகம் என்ற எண்ணத் தோன்றுகிறது.

 இந்த விடயம் தொடர்பாக 2016 இல் முன்னெடுக்கப்பட்ட சுயாதீன விசாரணையின் பின்னர் 2017 இல் இடைக்கால அறிக்கை வெளிவந்தது (இணைப்பு – கீழே).மேலும் இரண்டு வருடத்துக்கு நீடிக்கப்பட்ட இந்த விசாரணையின் இறுதி அறிக்கை 2019 இல் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை, இதுவரை காலமும் பழங்குடிப் பெண்கள் சிறுமிகள், மற்றும் LGBTQ2S+  குழுவினர் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை, கட்டாயக் கருத்தடை, குடும்ப உறுப்பினர்களைப் பிரித்தெடுத்தமை போன்ற அனைத்துமே கனடிய அரசின் காலனித்துவக் கட்டமைப்பின் ஆதரவோடு திட்டமிட்டு செய்யப்பட்ட இனப் படுகொலையென பகிரங்கமாக வெளிப்படுத்தியது.  

 இதேநேரம் கனடாவின் பக்கத்துக்கு நாடான அமெரிக்காவில் 2016ம் வருட அறிக்கைப்படி 5,712 பழங்குடிப் பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அப்படிப் பார்க்கும்போது வடஅமெரிக்காவில் வாழ்ந்துவரும் பழங்குடிப் பெண்களில் 7,00௦ற்கு மேற்பட்ட எண்ணிக்கையானவர்கள் கடந்த மூன்று தசாப்த காலங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கொள்ள முடியும். அவர்களில் பலர் திட்டமிட்ட முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் இங்கு மீண்டும் அழுத்திச் சொல்ல முடியும்.

 ஏனைய பிரச்சனைகள்

இதனைத் தவிர பழங்குடியினர்கள் கடந்த பல தசாப்தங்களாக மிகவும் நெருக்கடி நிறைந்த மற்றும் மோசமான வதிவிடச் சூழலிலேயே வாழ்ந்து வருகிறார்கள். மோசமான சுகாதார வசதிகள், சுத்தமான குடிநீருக்குத் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

 மறுபுறத்தில் இவர்களில் கணிசமானவர்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் பிரித்தெடுக்கப்பட்டார்கள். குறிப்பாக மாகாண குழந்தைகள் பாதுகாப்புச் சபைகள் 1950 ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பழங்குடிச் சிறுவர்களை குடும்பங்களிலிருந்து பிரித்து வெள்ளையினத் தம்பதிகளிடம் கையளித்து அந்தச் சிறுவர்களை படிப்படியாக வெள்ளையர்களோடு கலக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்தன. இதற்கு தாமே உருவாக்கிய குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி தமது செயற்பாடுகளை நியாயப்படுத்தினர்.

 மிகக் குறைந்த வருமானம், அதிகரித்த வேலையற்றோர் வீதம், சரி செய்யப்படாத சமூகப் பிரச்சனைகள் காரணமாக அதிகளவிலான பழங்குடியினர் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக சிறைக்குச் செல்ல வேண்டிய சூழல் என்பன ஏனைய சில பிரச்சனைகளாகும். அதேபோல ஏனைய சமூகங்களை விட அதிகளவிலான தற்கொலை வீதமும் (ஐந்திலிருந்து ஏழு மடங்கு அதிகம்) பழங்குடியினர் எதிர்நோக்கும் பிரச்சனையாகும்.

 இவ்வாறு பல்வேறு பிரச்சனைகளுக்குப் பழங்குடியினர் முகங்கொடுக்கும் நிலையில் 2016இலிருந்து 2019 வரை நடைபெற்ற விசாரணைகளின் அறிக்கை வெளியாகி கடந்த ஜூன் மாதத்துடன் மூன்று வருடங்கள் ஆகின்றன. இதன் சிபார்சுகளை நடைமுறைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பழங்குடியினரின் உரிமைகள், கௌரவம் என்பவற்றைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுடன் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் முயற்சிகளை கனடிய அரசு செய்து வருவதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், அவ்வாறான முயற்சிகளில் மிகச் சிலவே இன்றைய தினம் வரை நடைமுறைக்கு வந்துள்ளன.

 பழங்குடியினர் எதிர்நோக்கும் புதிய சவால்கள்

இத்தனை தசாப்த காலங்களாக ஐரோப்பிய வம்சாவளி வெள்ளையர்களால் தொடர்ச்சியாக திட்டமிட்ட, திட்டமிடாத வகையில் இனரீதியான ஒடுக்குமுறைக்கும் பாகுபாட்டிற்கும் பழங்குடியினர் உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் அண்மைக் காலங்களில் கனடாவிற்கு குடிபெயர்ந்த தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கும் பழங்குடியினருக்கும் இடையில் சில இடங்களில் முரண்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தெற்காசியர்களில் வாடகை வாகனம் ஓட்டும் சிலரால் பழங்குடிப் பெண்கள், சிறுமிகள் கடத்தப்படுகிறார்கள் அல்லது கடத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இது புதியதொரு முரண்பாட்டு நிலையைத் தோற்றுவிக்கும் சம்பவமாக மாறி வருகிறது.

 கனடிய தேசம் பல திறமையாளர்களை தகுதி அடிப்படையில் உள்வாங்கும் நாடாக இருந்தாலும் மிகப்பெரும் எண்ணிக்கையில் உலகின் பல பகுதிகளிலுமிருந்து அகதிகளாக வரும் மக்களுக்கு இன, மத வேறுபாடு இன்று தஞ்சம் கொடுக்கும் நாடாகவும் இன்றைய நாளில் விளங்குகிறது. ஆனால், அவ்வாறு கனடாவிற்கு குடிபெயர்ந்து வந்து இந்த நாட்டைத் தமது நாடாக வரித்துக் கொண்ட பலருக்கு இந்த நாட்டின் முதற் குடிகளான பழங்குடியினர் தொடர்பாக நல்லபிப்பிராயம் இல்லை என்பதே கசப்பான உண்மை.

 இந்தக் குடிவரவாளர்கள் குடியேறிவர்கள் எவ்வளவு தூரம் கனடிய பழங்குடியினரின் துயரங்களை அறிந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குரியதே. இன்றும் எம்மில் பலர் பழங்குடியினர் சோம்பேறிகள், போதைக்கு அடிமையானவர்கள், நாம் கஷ்டப்பட்டு உழைத்துக் கட்டும் வரிப்பணத்தில் சொகுசாக வாழ்பவர்கள், அவர்கள் மட்டும் ஏன் வரி கட்டுவதில்லை போன்ற அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பதோடு தமக்குள்ள இது போன்ற கருத்துப் பரிமாற்றத்தையே செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவெனில், பழங்குடியினர் தற்போது வாழும் பகுதிகளுக்குள் முடக்கப்படும் முன்னர், அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கிய நிலங்களில் நின்றுகொண்டுதான் அவர்களை தரம் தாழ்த்தி விமர்சிக்கிறோம் என்பது அவர்களுக்கே தெரியவில்லை.

 நான் முன்னர் குறிப்பிட்டது போல, அரசு தனது கடந்த காலத் தவறை உணர்ந்து, அரசுக்கும் பழங்குடியினருக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு பொருத்தமான தீர்வினை வழங்கவும் சில முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் கனடாவின் ஒவ்வொரு குடிமகனும் அவர்களை சரியாகப் புரிந்து கொள்ளாமல், அரசின் முயற்சிகள் மட்டும் முழு வெற்றியைத் தந்து விடாது. தற்போது ஆங்காங்கு பழங்குடியினருக்கும் பல்வேறு நாடுகளிலுமிருந்து குடிவரவாளர்களாக வந்தவர்களுக்குமிடையில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் உருவாக்கும் முயற்சிகள் மேலும் பரவலாக்கப்பட வேண்டும். பழங்குடியினர் சுயகௌரவத்துடன் வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

 எழுதுவது : வீமன், கனடா.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *