ஐரோப்பாவின் எல்லைக்கதவுகளூடே நுழைந்துவரும் அகதிகளின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு.
ஞாயிறன்று மாலையில் லிபியாவிலிருந்து இத்தாலியக் கடலுக்குள் நுழைந்த கப்பலொன்றிலிருந்து சுமார் 200 பேரைக் காப்பாற்றியது Ocean Viking என்ற மத்தியதரைக்கடலில் உதவுவதற்காக ரோந்து செய்துவரும் கப்பல். அவர்களில் பெரும்பாலானோர் ஆரோக்கியம் பலவீனமடைந்து மருத்துவ உதவி தேவைப்படும் நிலையிலிருப்பதாக அக்கப்பலில் பணியாற்றுகிறவர்கள் குறிப்பிட்டார்கள். அதே நாளில் வேறு கப்பல்கள் மூலமாகவும் இத்தாலிக்குள் மேலும் சுமார் 1,000 பேர் நுழைந்திருக்கிறார்கள்.
இதுவரை மத்தியதரைக்கடல் மார்க்கமாக இத்தாலிக்குள் சுமார் 34,000 அகதிகள் நுழைந்திருப்பதாக இத்தாலியின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. போராலும், அதன் பின்பு அகதி வாழ்விலும் வன்முறைகளை அனுபவித்த அகதிகளில் பலரும் மருத்துவ, மனோதத்துவ உதவிகள் வேண்டிய நிலையிலிருப்பதாக அக்கடலில் உதவுவதற்காக ரோந்து செய்யும் கப்பலில் பணியாற்றும் லௌரன்ஸ் பொண்டார்க் குறிப்பிடுகிறார். ஆயினும், அகதிகள் பற்றிய நிலைமையை தனது நாட்டின் அதிகாரங்கள் புறக்கணிப்பதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
கடலில் உதவிக்காகத் தவிக்கும் அகதிகளை இத்தாலியின் கடற்படையினரின் மீட்புக்கப்பல்களும், அதே போன்ற உதவிகள் செய்வதற்காகத் தனியார் அமைப்புகளால் ரோந்து செய்யும் கப்பல்களும் காப்பாற்றுகின்றன. ஆயினும், வருடாவருடம் உதவியின்றிக் கடலில் மூழ்கி இறந்துவிடுபவர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காகும். மீட்புக் கப்பல்களால் காப்பாற்றப்படுகிறவர்களை ஏதாவது ஒரு நாடு ஏற்றுக்கொள்ளும்வரை அவர்கள் எல்லைக்குள் நுழைய முடியாது.
ரப்பரால் செய்யப்பட்ட பாதுகாப்பற்ற கப்பல்களில் ஞாயிறன்று காப்பாற்றப்பட்டவர்கள் நாட்டுக்குள் நுழைய இத்தாலிய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்கள். ஐவர் ஏற்கனவே இறந்திருப்பதாகவும் அதி அவசர உதவி தேவைப்பட்ட சிலர் மட்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்