அமெரிக்கப் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட ஒருவருக்கு 7 வருடச் சிறைத்தண்டனை.
டொனால்ட் டிரம்ப் தேர்தலில் தோல்வியடைந்ததை மறுத்துத் தனது ஆதரவாளர்களைத் தூண்டி நாட்டின் பாராளுமன்றத்தினுள் அவர்களை நுழையத் தூண்டிவிட்டது பற்றி ஒரு பக்கம் விபரங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம், அந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் சாட்சியங்கள் மூலம் பலர் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஜனவரி 06 இல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கொடுக்கப்பட்ட தண்டனைகளில் மிக நீண்ட தண்டனை 49 வயதான ஒருவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நபர் ஒரு தீவிரவாத வலதுசாரிக் குழுவின் முக்கிய அங்கத்துவராகும். பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்தவர்களை உசுப்பிவிட்டு, வன்முறைகளில் ஈடுபடத் தூண்டியதில் அந்த நபருக்கு முக்கிய பங்கு இருப்பதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
பாராளுமன்றத்தில் நடந்த சபையைக் குழப்பியது, அங்கே ஆயுதங்களுடன் நுழைந்தமைக்காகக் குறிப்பிட்ட நபர் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அவரது மகன் அவருக்கெதிராக நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். காரணம், குறிப்பிட்ட சம்பவங்களில் அவரது பங்களிப்பைப் பற்றி மகன் பொலீசாருக்கு அறிவிக்க முற்பட்டதாகும்.
இதுவரை 840 பேர் அமெரிக்கப் பாராளுமன்றத்தினுள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதுகாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 70 பேர் மீது வழக்குகள் தொடரப்பட்டுத் தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்