இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகும் அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு பற்றிய சில விமர்சனங்கள்!
இன்று ஓகஸ்ற் மாதம் 03ஆம் திகதியன்று, மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடானது யாழ் பல்கலைக் கழகக் கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆய்வு மாநாட்டினை யாழ்ப்பாணப் பலிகலைக் கழகத்தின் தமிழ்த் துறையானது 2000ஆம் ஆண்டிலிருந்து நடாத்திவருகிறது.
இந்த அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடானது கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியத்தின் நிதி உதவியுடன் நடாத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வருடங்களிலும் ”வரலாற்றுப் போக்கில் தமிழியல் ஆய்வுகள்” என்ற விடயமும், ”பன்முக நோக்கில் சங்க இலக்கியம்” என்ற விடயமும் ஆராயப்பட்டிருந்தன.
ஆனால், தமிழ் எழுத்து மொழியில் ஒரு சொல் எப்படிப் பொருள்கள் உணர்த்துகின்றது என்பதைச் சரியாக ஆராய்ந்து அறியாத நிலையில், பண்டைய இலக்கியங்களையும், தொல் பொருட்களையும் சரியாக விளங்கிக்கொள்ள முடியாத நிலைதான் இருந்துவரும்.
இது வரலாற்றினைக் கற்பனையானதாக்கும், பிழையானதாக்கும். எழுத்து மொழியில் ஒரு சொல் பொருளை உணர்த்துவது இடுகுறி, காரணம் என்ற இராண்டு விதங்களில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. காலத்தால் முற்பட்டது எனக் கூறப்படும் தமிழ் இலக்கண நுலான ”தொல்காப்பியம்” என்ற நூலில், தொல்காப்பியன் ” மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா” என்றுள்ளார்.
இந்த நிலையில், தமிழ் மொழியில் ஒரு சொல் பொருள் உணர்த்தக் ”காரணம்” உண்டு, ஆனால் அக்” காரணம்” விழிப்பத் தோன்றா ஆகும். அது நேரடியாகப் புலப்படாது, மறைந்த வித்தில் தான் இருக்கும் என்றுள்ளார்.
”மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா” என்ற சூத்திரத்திற்கு உரை விளக்கத்தினை எழுதியிருந்த பண்டைய உரையாசிரியன் ”நச்சினார்க்கினியர்” என்பவர், பின்வருமாறு உணர்த்தியுள்ளார்.
நுண்ணறிவு இல்லாதோர்க்கு சொல் பொருளை உணர்த்தும் ”காரணம்” விளங்கிக்கொள்ள முடியாதது என்றும், அவர்கள் தமிழ் மொழியில் சொல் பொருளை உணர்த்துவது மரபு அடிப்படையில் எனக் கொள்ளவேண்டியதுதான் என்றுள்ளார்.
“சேனாவரையர்” என்ற பண்டைய உரையாசிரியர் தனது உரை விளக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்:”இ –ள் உறு தவ முதலாயின சொற்கு மிகுதி முதலாயின பொருளாதல் வரலாற்று முறைமையாற் கொள்வதல்லது, அவை அப்பொருளாவதற்குக் காரணம் விளங்கத் தோன்றா எ-று.பொருளொடு சொற்கியைபு இயற்கையாகலான் அவ்வியற்கையாகிய இயைபாற் சொற்பொருளுணர்த்துமென்ப. ஒரு சாரார் பிற காரணத்தாணுணர்த்துமென்பர்.
அவற்றுள் மெய்மையாகிய காரணம் ஆசிரியர்க்குப் புலனாவதல்லது நம்மனோர்க்குப் புலனாகாமையின், மொழிப்பொருள் காரணம் இல்லையென்னாது விழிப்பத் தோன்றா என்றார். அக்காரணம் பொதுவகையான் ஒன்றாயினுஞ் சொற்றொருமுன்மையிற் சிறப்பு வலகையாற் பலவாம்; அதனால் விழிப்பத் தோற்றா எனப் பன்மையாற் கூறிளார்.உரிச்சொற் பற்றி ஓதினாரேனும், ஏனைச் சொற்பொருட்கும் இது ஒக்கும்.”சேனாவரையரது உரை விளக்கமானது பின்வருவனவற்றை விலியுறுத்தியுள்ளது:
1) ஒரு சாரார், பொருளொடு சொற்கியைபு இயற்கையாகலான் அவ்வியற்கையாகிய இயைபாற் சொற்பொருள் உணர்த்துமென்ப;
2) மற்றொரு சாரார் ஒரு சொல்லானது பிற காரணத்தால்தான் பொருள் உணர்த்தும் என்ப;
3) அவற்றுள் மெய்மையாகிய காரணம் ஆசிரியர்க்குப் புலனாவதல்லது நம்மனோர்க்குப் புலனாகாமையின், மொழிப்பொருள் காரணம் இல்லையென்னாது விழிப்பத் தோன்றா என்றார்;
4) அக் காரணம் பொதுவகையான் ஒன்றாயினும் சொற்றொரும் உன்மையிற் சிறப்பு வலகையாற் பலவாம்; அதனால் விழிப்பத் தோற்றா எனப் பன்மையாற் கூறிளார்.;
5) உரிச்சொற் பற்றி ஓதினாரேனும், ஏனைச் சொற்பொருட்கும் இது ஒக்கும் இவைகளை ஒருவர் சரியாக விளங்கிக்கொள்வது கடிணமல்ல.
ஆனால், ”அக் காரணம் பொதுவகையான் ஒன்றாயினும் சொற்றொரும் உன்மையிற் சிறப்பு வலகையாற் பலவாம்; அதனால் விழிப்பத் தோற்றா எனப் பன்மையாற் கூறிளார்” என்பதை விளங்கிக் கொள்வதில்தான் பிரச்சினை ஏற்படுகிறது.இதை விளங்கிக்கொள்ளப் ”பொருளொடு சொற்கியைபு இயற்கையாகலான் அவ்வியற்கையாகிய இயைபாற் சொற்பொருள் உணர்த்துமென்ப” என்பதை விளங்கவேண்டியுள்ளது.சொல் பொருள் உணர்த்தும் ”காரணம்” ஆனது, ”பொது வகையால்” ஒன்றாக இருப்பினும், ”சிறப்பு வகையால்” பலவாக இருப்பது எப்படி என்ற கேள்விக்குச் சரியான விடையைக் காணவேண்டியுள்ளது.இது ஒரு சொல்லானது பொது வகையால் ஒரு பூரண விபரிப்பினைச் செய்வதாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், அந்த விபரிப்பானது பல வெவ்வேறு பொருட்களில் அடையாளங் காணப்பட முடியும் என்பதையும் வலியுறுத்துகிறது.
இந்தநிலையில், ஒரு தமிழ்ச் சொல் ஆனது என்ன அடிப்படையில் ஒரு பூரண விபரிப்பினைச் செய்வதாக இருக்கும் என்பது முக்கிய கேள்வியாகும். துரதிஷ்டவசமாக உலக மொழியாராய்வாளர்கள் எவரும், தொல்காப்பியன் குறிப்பிட்ட “மொழிப்பொருள் காரணத்தை“ இன்றுவரை ஆராய்ந்து சரியாக அறியவில்லை.
இலங்கையின் தமிழ்ப் பேராசிரியர் அ. சண்முகதாசும் தனது ”தமிழ் மொழி இலக்கண இயல்புகள்” என்ற நுலில் தொல்காப்பியன் குறிப்பிட்ட மொழிப்பொருட் காரணத்தை ஆராய்ந்து அறிந்திருக்கவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்தப்பட்டுவரும் அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டிலும், தொல்காப்பியன் குறிப்பிட்ட ”மொழிப்பொருள் காரணம்” என்பது பற்றி ஆராய்ந்து சரியான முடிவுக்கு வரப்படவில்லை!இந்தநிலையில், பண்டைய தமிழ் இலக்கியங்கள், தொல்பொருட்கள் என்பவைகளில் எழுத்து வடிவில் எழுதப்பட்டிருப்பவைகள் உண்மையில் எவற்றைக் கூறுகின்றன என்பது சரியாக விளங்கப்பட முடியாததொன்றாகவே இருக்கும்.
இது தமிழரின் மொழி, சமயங்கள், கலைகள், சித்தாந்தங்கள், ஏனையவைகளின் வரலாறுகளைச சரியாக விளங்க முடியாத நிலையைத்தான் உருவாக்கும். ஆனால் தமிழரிd; பல்வேறு விடயங்கள் பற்றி வரலாறுகள் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளன. ஆகவே, தமிழரின் பல்வேறு விடயங்கள் தொடர்புாக எழுதப்பட்டுள்ள வரலாறுகள் சிறந்த மர்ம நாவல்களாக இருக்கவும் சமனான வாய்ப்புக்கள் உள்ளன. இந்தநிலையில், பெருமளவு பணச் செலவுடன் அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடுகள் நடாத்தப்படலாம்.
ஆனால், தமிழ் எழுத்து மொழியில் ஒரு சொல் பொருள் உணர்த்தும் காரணம் சரியாக ஆராய்ந்தறியப்படாத நிலையில், பல்வேறு விடயங்களைப் பற்றிய நடாத்தப்பட்டுவரும் ஆய்வுகள் போலியானவையாகவும், பிழையானவைகளாகவும் இருக்கும்.நான்காவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டில், தமிழ் மொழியில் ஒரு சொல் பொருள் உணர்த்துவது எப்படி என்பது பற்றி முழுமையாக ஆராய்ந்து, முக்கிய தமிழ்ச் சொற்கள் பணடைய இலக்கியங்களில் என்னென்ன பொருள்களை ஏன் உணர்த்திளுய்யன என்பவைகளை விரிவாக ஆராய்வார்களா?அல்லது போலி அய்வுகள் மாத்திரம்தான் தொடருமா?
இதைவிட இந்த மாநாட்டில் கல்லடி வேலுப்பிள்ளையின் ”யாழ்ப்பாண வைபவ கௌமுதி” என்ற நூலும், சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவரின் ”தமிழ்ப் புலவர் சரித்திரம்” என்ற நூலும் பதிப்பிக்கப்பட்டு வெளியடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமானது கல்லடி வேலுப்பிள்ளையினது வரலாற்று நூலும், குமாரசாமிப் புலவரது புலவர்களது வரலாற்று நூலும் நம்பகமானவை, சரியானவை என்பதை உறுதிப்படுத்தவதாக அமைகிறது.இவைகள் இரண்டிலும், வேலுபபிள்ளையின் ”யாழ்ப்பாண வைபவ பௌமுதி” என்ற வரலாற்று நுலானது நம்பகமான, சரியான நூல் என யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் அங்கீகரிப்பது பிரச்சினைக்குரிய விடயமாகும்.
இங்கு எழுப்பப்படவேண்டிய முதலாவது முக்கிய கேள்வி என்னவெனில் கல்லடி வேலுப்பிள்ளையினது வரலாற்று நூலினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறந்த ஆய்வுக்கு விட்டு, விமர்சித்து, அதில் கூறப்பட்டிருப்பவைக் சரியானவை, நம்பகமானவை எனபதை எப்போது, எப்படி உறுதிப்படுத்தியிருந்தது என்பதாகும்.யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் இதனைச் செய்திருந்ததாக இன்றுவரை அறியப்படவில்லை.
இந்தநிலையில், இந்த நூலின் வெளியிடுகையானது பிற நோக்கங்களைக் கொண்டதாகவே இருக்கமுடியும்.இதுவும் ஆராயப்படவேண்டிய விடயமாகும்.
நண்பாகளே!
நான் கல்லடி வேலுப்பினள்ளையின் நூலை வெவ்வேறு பல தடவைகள் முழுமையாக ஆராய்ந்திருந்தேன். அதனது முதல் பதிப்புப் பிரதி ன்னிடம் உள்ளது. அதை ஒரு நம்பகமான வரலாற்று நூலாக நான் கருதவில்லை. அதை யாழ் பல்கலைக் கழகம் வெளியிடுவது அரசியல் பின்னணி காரணமாகவும், ஒரு சாராருக்கு விளம்பரம் செய்யவும் என்றே கருதுகிறேன்.
கல்லடி வேலுப்பிள்ளையின் வரலாறையும், அவரது வயாவிளான் முன்னையோர்களது வரலாறையும் யாராவது ஆராய்ந்துள்ளீர்களா?
இவர் தனக்குப் பிடிக்காதவர்கள் பற்றி கேவலமாக எழுதுபவரும், பாட்டுக்களைப் பாடகின்றவருமாகும். தனது நூலை வெளியிட பலரிடம் மிரட்டிப் பணம் சேர்த்தவராகவும் கூறப்படுகிறது. இப்படி வலிகாமம் தெற்குப் பகுதியின் உடுவிலைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் பணம் கேட்டபோது அவர்கள் மறுத்த நிலையில், பிறரிடம் பேசுவதுபோல் பேசியபோது. கல்லடி வேலுபபிள்ளைக்கு அடி போட்டித் துரத்தியிருந்ததாகவும், அதனால் அவரது நுலில் அந்தக் குடும்பத்தினரை கீழ் சாதியினர் என எழுதியதாகவும் முன்னர் பேசப்பட்டது. கல்லடி வேலுப்பிள்ளை உடவிலின் கீழ் சாதியினர் என எழுதிய குடும்பத்தினர் உயர் குடியினர் என சுவாமி ஞானப்பிரகாசர் தனது நூலில் எழுதியிருந்ததாக அறியப்படுகிறது.
இன்னொரு கத்தோலிக்க குடும்பத்தைப் பற்றித் தனது பத்திரிகையில் எழுதி, கல்லடி வேலுப்பிள்ளை பல வருடங்கள் மறியலில் இடப்பட்டதாகவும் அறிய வருகிறது. ஒன்றில் விருப்பு – வெறுப்பு அதிகம் உள்ளவர் அதைப் பற்றி ஆராய்ந்து சரியான முடிவுக்கு வருவார் என்பதற்கில்லை.
உதயகுமார் அபிமன்யசிங்கம்