ரோஹின்யா அகதிகளை வெளியேற்ற சீனாவிடம் உதவி கோருகிறது பங்களாதேஷ்.
இராணுவத்தினரால் ஆட்சி கவிழ்க்கப்பட்டுக் கையகப்படுத்தப்பட்ட மியான்மாரில் வாழ்ந்துவந்த லட்சக்கணக்கான ரோஹின்யா மக்கள் அங்கே கொடுமைப்படுத்தப்பட்டமை உலகமறிந்ததே. அவர்களை அங்கிருந்து திட்டமிட்டு மியான்மார் 2017 இல் துரத்தியதால் அவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். ரோஹின்யா இனத்தவரை மியான்மார் மீண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சீனா மியான்மார் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்தியாவின் பாரம்பரிய நட்பு நாடான பங்களாதேஷ் சீனாவுடனும் நெருங்கிய உறவைப் பேணி வருகிறது. சர்வதேச ரீதியில் புறக்கணிக்கப்படும் மியான்மார் அரசுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் நாடாக இருந்து வருகிறது சீனா. தனது நாட்டில் அகதிகளாக நுழைந்து வாழும் சுமார் 700,000 ரோஹின்யா இனத்தவருக்குப் புகலிடம் கொடுப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டிருக்கும் பங்களாதேஷ், சீன – மியான்மார் நெருக்கத்தைப் பயன்படுத்தி ரோஹின்யா அகதிகள் விடயத்தில் தமக்கு உதவும்படி கேட்டுக்கொண்டிருக்கிறது. பங்களாதேஷுக்குச் சில நாட்களுக்கு முன்னர் விஜயம் செய்த சீனாவின் வெளிவிவகார அமைச்சரிடம் அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவுகள் கொண்டிருக்கும் பங்களாதேஷ் தனது முக்கிய வர்த்தக உறவு நாடாகச் சீனாவைக் கொண்டிருக்கிறது. தமது முக்கிய ஏற்றுமதிப் பொருளான உடைகள் தயாரிப்புக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை சீனாவிடமே பெரும்பான்மையாக வாங்கிவருகிறது. சீனாவின் பல நிறுவனங்களும் பங்களாதேஷில் இயங்கிப் பெருமளவில் முதலீடு செய்திருப்பதால் பொருளாதார ரீதியில் சீனா ஒரு முக்கிய உறவாக விளங்கி வருகிறது. பங்களாதேஷின் பல போக்குவரத்து அபிவிருத்தித் திட்டங்களுக்குச் சீனாப் பெருமளவில் உதவி செய்து வருகிறது.
தாய்வானைத் தனது நாட்டின் பகுதியாகப் பார்க்கும் சீனாவின் நிலைப்பாட்டையும் பங்களாதேஷ் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 2008 இல் பங்களாதேஷில் தேர்தலை வென்ற பிரதமர் ஷேய்க் ஹசீனா சீனாவின் வேண்டுகோளை ஏற்றுத் தனது நாட்டிலிருந்த தாய்வான் அரச அதிகாரமையங்களை மூடிவிட்டார். அதன் பின்னர், சீனாவின் ஆதரவு பங்களாதேஷுக்கு அதிகரிக்கப்பட்டது.
2017 லேயே சீனா தனது நட்பு நாடான மியான்மாரிடம் ரோஹின்யா இனத்தோரை மீண்டும் ஏற்றுக்கொள்ளக் கோரியிருந்தது. அதை மியான்மார் ஏற்றுக்கொண்டாலும்கூட ரோஹின்யா மக்கள் அவநம்பிக்கை காரணமாக பங்களாதேஷின் அகதிகள் முகாம்களிலிருந்து வெளியேற மறுத்து வருகிறார்கள். அதுபற்றி மீண்டும் தாம் மியான்மாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகச் சீனா தரப்பில் உறுதி கூறப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்