கெய்ரோ நகரத்துத் தேவாலயமொன்றிலேற்பட்ட தீவிபத்தில் 41 பேர் இறந்தனர்.
ஞாயிறன்று காலையில் கெய்ரோவின் இம்பாபா நகரப்பகுதியிலிருக்கும் தேவாலயமொன்றில் தீவிபத்து ஏற்பட்டது. அந்தக் கொப்தியக் கிறீஸ்தவத் தேவாலையத்தில் திருப்பலியில் பங்குபற்றுவதற்காக அச்சமயத்தில் சுமார் 5,000 பேர் வந்திருந்தனர்.
இம்பாபா நகரப்பகுதி கெய்ரோவின் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் ஒன்றாகும். தீயணைக்கும் படையினரும், மருத்துவ சேவையினரும் உடனடியாகத் தேவாலயத்திற்கு வந்துசேர்ந்தனர். அத்தீயை அணைக்கும் முன்னரே சுமார் 41 பேர் இறந்துவிட்டதாகவும், மேலும் இரண்டு டசினுக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேவாலயத்தின் மின்சார இணைப்புகளில் இருந்த தவறு ஒன்றாலேயே தீ உண்டாகி வேகமாகப் பரவியதாகத் தீயணைக்கும் படையினரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. எகிப்தின் ஜனாதிபதி அல் – சிசி இறந்துபோனவர்களுடைய குடும்பங்களுக்குத் தனது அனுதாபத்தைத் தெரிவித்ததுடன் தேவையான உதவிகளை அவர்களுடைய சமூகத்துக்குச் செய்யும்படியும் உத்தரவிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்