“ரஷ்யாவின் தானியங்கள், உரங்கள் ஏற்றுமதிசெய்யப்பட ஏற்பாடுகள் நடக்கின்றன” என்கிறார் குத்தேரஸ்.
துருக்கிய ஜனாதிபதியின் தலையீட்டால் வெற்றிகரமாக உக்ரேனில் விளைவிக்கப்பட்ட தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை ரஷ்யாவின் தாக்குதலில்லாமல் ஏற்றுமதிசெய்ய ஒழுங்குசெய்த ஐ.நா-வின் பொதுக் காரியதரிசி அதே போலவே ரஷ்யாவில் கிடக்கும் தானியங்களையும் ஏற்றுமதிக்குக் கொண்டுசெல்லவேண்டியது முக்கியம் என்று குறிப்பிட்டார். உலகில் தானியங்களுக்கு மட்டுமன்றி உரங்களை ஏற்றுமதி செய்வதிலும் ரஷ்யாவும், உக்ரேனும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
ரஷ்யாவின் உரங்களையும், தானியங்களையும் ஏற்றுமதி செய்வதற்கு மேற்கு நாடுகள் தடை போட்டிருக்கவில்லை. அவற்றைச் சந்தைக்குக் கொண்டுவருவது உலக நாடுகளுக்கு – முக்கியமாக பொருளாதார பலமற்ற நாடுகளுக்கு – அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். 2023 இல் உலக நாடுகளின் விவசாயத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் உரங்களின் ஏற்றுமதிக்கும் இவ்வருடமே ஒழுங்குகள் செய்யப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிடார்.
உக்ரேனின் கருங்கடல் துறைமுகத்திலிருக்கும் கப்பல்களின் தானியங்கள் வெளிநாடுகளுக்குப் போய்ச் சேரவேண்டும் என்ற ஒப்பந்தத்தின் மேலுமொரு பகுதி ரஷ்யா, உக்ரேன் இரண்டு நாடுகளுடைய தானியங்களும், உரங்களும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கும் இடையூறுகள் களையப்படவேண்டும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
சமீப நாட்களில், துருக்கிய ஜனாதிபதியுடன் உக்ரேனுக்கு விஜயம் செய்து உக்ரேன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார் குத்தேரஸ். அதன் பின்னர் அவர் உக்ரேனின் கருங்கடல் துறைமுகமான ஒடெஸ்ஸாவுக்கும் சென்று அங்கே நிலைமையை நேரடியாக அவதானித்தார். அந்த நாட்டின் தானியக்கப்பல்கள் அங்கிருந்துதான் பயணமாகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்