முதல் தடவையாக எவ்ரோ நாணய மதிப்பு டொலரைவிடக் குறைந்தது.
ஜனவரி 1999 இல் பிறந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயம் அதையடுத்த சமயங்களில் அமெரிக்க டொலரைவிட அதிக மதிப்பை அடைந்தது. ஆனால், மீண்டும் அது டொலருடனான பெறுமதியில் மதிப்பை மெதுவாக இழந்து ஜூலை 2002 இன் நடுப்பகுதியில் டொலரைவிட மதிப்பில் வீழ்ந்தது. அதேபோலவே மீண்டும் எவ்ரோ 20 வருடங்களுக்குப் பின்னர் டொலரைவிடக் குறைந்த மதிப்பில் பண்டமாற்றம் செய்யப்பட்டது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் போரை எதிர்த்து மேற்கு நாடுகளால் போடப்பட்டிருக்கும் முடக்கங்கள் எரிசக்தி விலைகளையும், கையிருப்பையும் பாதிக்கின்றன. அமெரிக்காவை விட அதிகளவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது தேவைக்காக ரஷ்யாவின் எரிசக்திக் கொள்வனவில் தங்கியிருக்கின்றன. ரஷ்யாவிடம் அக்கொள்வனவைக் குறைப்பதால் தொழிற்சாலைகளுக்கான எரிசக்தித் தேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மீதான நம்பிக்கை குன்றியிருப்பதே எவ்ரோவின் சமீபத்திய வீழ்ச்சிக்கான காரணம் என்று குறிப்பிடப்படுகிறது.
எவ்ரோவின் மதிப்பு வீழ்ச்சி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மக்கள் சுற்றுலாக்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவர்களின் பணமதிப்பு விழுந்திருப்பதை உணரச்செய்யும். அதேசமயம் அமெரிக்கர்கள் ஐரோப்பாவுக்குள் மலிவாகத் தமது டொலர்களைப் பாவித்துச் சுற்றுலா செய்யலாம்.
டொலரின் மதிப்பு அதிகமாகியிருப்பது அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களின் சர்வதேச விலையை அதிகரிக்கும். அமெரிக்காவின் அதிமுக்கிய வர்த்தகப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் இருப்பதால் அமெரிக்காவின் ஏற்றுமதி பாதிக்கப்படும். அதேசமயம் எவ்ரோவின் மதிப்பு வீழ்ச்சி ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்களுக்கான விலைகள் சர்வதேசச் சந்தையில் மலிவாக்கும். ஐரோப்பாவின் ஏற்றுமதி முன்னரைவிட அதிகரிக்கலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்