வரலாறு காணாத வரட்சி யாங்சீ நதிக்குள்ளிருந்த புத்த சிலைகளை வெளிக்காட்டியது.
ஜியாலிங் நதி யாங்சீ நதியில் வந்து சேருமிடம் சீனாவின் மத்திய பாகத்திலிருக்கும் சொங்குவிங் என்ற நகரத்தை அடுத்திருக்கிறது. நதிகள் கலக்குமிடத்தில் இதுவரை நீருக்குள்ளிருந்த சிறு தீவொன்று வரட்சியால் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அத்தீவில் சீன அகழ்வாராய்ச்சியாளர்களால் மூன்று புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
தென்மேற்குச் சீனாவில் கடந்த சில மாதங்களாக நிலவும் வரட்சியும், மழையின்மையும் சேர்ந்து நாட்டின் மிக நீளமான நதியான யாங்சீ நதியின் நீர்மட்டத்தைக் கணிசமான அளவு குறைத்திருப்பதாகச் சீனாவின் செய்திகள் குறிப்பிடுகின்றன. அந்த நதி ஆரம்பிக்கும் பிராந்தியத்தில் வழக்கத்தைவிட 45 % மழைவீழ்ச்சியே கிடைத்திருப்பதே அதற்குக் காரணமாகும்.
வரண்ட நதியின் தீவின் மிக உயரமான பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள் சுமார் 600 வருடங்களுக்கு முந்தைய காலப்பகுதியைச் சேர்ந்தவை.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை வரட்சியின் விளைவால் றேன் நதியின் நீர்மட்டம் குறைந்ததால் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல்களுக்குப் பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன. அதே நேரம், அந்த நதியில் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் மூழ்கிய இருபது போர்க்கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
1944 இல் சோவியத் படைகள் முன்னேறும்போது பின்வாங்கிய நாஸி ஜேர்மனியின் நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்கள் மூழ்கிக் காணாமல் போயின. அவைகளில் சிலவே றேன் நதியில் பிரகோவா என்ற செர்பியப் பகுதியில் காணக்கிடைக்கின்றன. அவை நீர்மட்டம் குறைந்த நதியின் போக்குவரத்துக்கு மேலும் இடைஞ்சலைக் கொடுக்கின்றன.
இத்தாலியின் போ நதி வற்றியதால் அங்கே இரண்டாம உலகப் போர்க்காலத்தில் போடப்பட்டு வெடிக்கப்படாத ஒரு குண்டு கிடந்தது. அதை இத்தாலிய இராணுவத்தினர் பாதுகாப்பாக அகற்றி வெடிக்கச்செய்தனர்.
சாள்ஸ் ஜெ. போமன்