தமது தொழில்நுட்பத்தைத் திருடியதாக பைசர்/பயோண்டெக் நிறுவனத்தை நீதியின் முன் இழுக்கிறது மொடர்னா.
தமது நிறுவனம் 2010 – 2016 ஆண்டுக்காலங்களில் கண்டுபிடித்த mRNA தொழில்நுட்பத்தை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக பைசர்/பயோண்டெக் நிறுவனத்தை நீதியின் முன் இழுத்திருக்கிறது மொடர்னா நிறுவனம். தமது தொழில்நுட்பத்தைப் பாவித்துச் சம்பாதித்ததற்கான நஷ்டஈட்டைத் தரவேண்டும் என்று மொடர்னா கோரியிருக்கிறது.
டிசம்பர் 2020 அமெரிக்காவில் மருந்துகளை விற்பனைக்காக அனுமதிக்கும் அதிகாரம் பைசர்/பயோண்டெக் கண்டுபிடித்த கொவிட் 19 தடுப்பு மருந்தைப் பாவிப்பதற்கான அனுமதியைக் கொடுத்தது. ஒரு வாரம் கழித்து மொடர்னா நிறுவனமும் தனது தடுப்பூசியைப் பாவிப்பதற்கான அனுமதியைப் பெற்றது. பைசர்/பயோண்டெக் நிறுவனம் இதுவரை தனது தடுப்பூசி மூலம் 22 பில்லியன் டொலர்களைச் சம்பாதித்திருக்க மொடர்னா சுமார் 10.4 பில்லியன் டொலர்களைச் சம்பாதித்திருக்கிறது.
mRNA தொழில்நுட்பத்தைப் பற்றிய ஆய்வுகள் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு மையங்களில் கொவிட் 19 தொற்றுகள் ஆரம்பிக்க நீண்ட காலத்துக்கு முன்னரே நடக்க ஆரம்பித்திருந்தன. அதன் உரிமை யாருடையது என்பதைப் பற்றி கொரோனாத் தடுப்பு மருந்துகள் பற்றிய உரிமைகளுடன் சேர்த்து வெவ்வேறு வழக்குகள் வெவ்வேறு நிறுவனங்கள் மீது போடப்பட்டிருக்கின்றன. எனவே மொடர்னா போட்டிருக்கும் வழக்கு இவ்வகையில் முதலாவதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட் 19 ஆரம்பித்த காலத்தில் மற்றைய நிறுவனங்கள் தான் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தைப் பாவித்துத் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்தால் அதற்காகத் தாம் மோதப்போவதில்லை என்று மொடர்னா அறிவித்திருந்தது. அது குறிப்பாக வறிய, வளரும் நாடுகளின் நிறுவனங்களை எண்ணிக் குறிப்பிடப்பட்டிருந்தது. தனக்குரிமையான தொழில்நுட்பத்தைப் பாவித்துத் தடுப்பு மருந்துகளைத் தயாரித்தவர்கள் பைசர் போன்ற நிறுவனங்கள் அதற்கான பொருளாதாரப் பெறுமதியைத் தரவேண்டும் என்று மார்ச் 2022 இல் மொடர்னா அறிவித்திருந்தது.
தாம் தமது தடுப்பு மருந்துக்காகப் பாவித்தது தம்மால் சொந்தமாகச் செய்யப்பட்ட ஆராய்ச்சியிலான தொழில்நுட்பமே என்றும் அதற்காகத் தாம் போராடுவோம் என்றும் பைசர்/பயோண்டெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மொடர்னா நிறுவனம் அவர்கள் மீது மசாசூடெட்ஸ் மாநில நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததை அடுத்து பைசர்/பயோண்டெக் நிறுவனத்தின் பங்குகளின் விலை 1 – 2 விகிதத்தால் வீழ்ச்சியடைந்தன.
சாள்ஸ் ஜெ. போமன்