ஏன் எரிக்கிறது ரஷ்யா தினசரி 10 மில்லியன் டொலர் பெறுமதியான இயற்கைவாயுவை?

பின்லாந்து – ரஷ்யா எல்லையில் போர்ட்டோவாயா நகரிலிருக்கும் இயற்கைவாயு மையத்திலிருந்து வானத்தை நோக்கி எரிவாயு எரித்து (gasfackling) அழிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. செயற்கைக்கோள் படங்களில் தெரியக்கூடிய அந்த ஜோதியை பின்லாந்தின் எல்லை நகரங்களிலிருந்தும் காணக்கூடியதாக இருக்கிறது. தினசரி 10 மில்லியன் டொலர் பெறுமதியான எரிவாயு வீணாக எரிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் நடவடிக்கை மிகவும் அதிர்ச்சிக்குரியது, ஆச்சரியத்துக்குரியது என்கிறார்கள் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள். அந்த எரிவாயு ஜேர்மனிக்கு ஏற்றுமதிசெய்யப்படவேண்டியது, ஆனால், வேண்டுமென்றே நிறுத்தப்பட்டதா? குறிப்பிட்ட எரிவாயு மையம் இருக்குமிடத்திலிருந்தே ஐரோப்பாவுக்கு ரஷ்யா நோர்த்ஸ்டிரீம் 1 என்ற குளாய் வழியாக திரவ எரிவாயுவை அனுப்புகிறது. அக்குளாயில் தவறு இருப்பதாகச் சமீபத்தில் ரஷ்யா குறிப்பிட்டு உதிரிப்பாகங்களைக் கனடாவிலிருந்து பெற்றுக்கொண்டது. ஆனால், தொடர்ந்தும் மற்றைய உதிரிப்பாகங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி வருகிறது ரஷ்யா. அதனால் அதனால் அக்குளாய் வழியாக அனுப்ப இயலாத எரிவாயு எரிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 

ஐக்கிய ராச்சியத்திலிருக்கும் ஜேர்மனியத் தூதுவர், “ரஷ்யா தன்னால் எங்கேயும் விற்கமுடியாத எரிவாயுவையே எரிக்கிறது,” என்று குறிப்பிடுகிறார். மேற்கு நாடுகள் தாம் ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்கமாட்டோம் என்று குறிப்பிட்டு அதேசமயம் அந்த நாடுகளில் எரிவாயுத் தட்டுப்பாட்டால் எகிறியிருக்கின்றன எரிசக்தியின் விலைகள். ஐரோப்பிய நாடுகளில் மக்கள் எரிசக்தி விலையைச் சுமக்கத் திணறிவரும் இச்சமயத்தில் ரஷ்யா வேண்டுமென்றே இந்த முறையைப் பாவிக்கிறது என்றும் ஒரு சாரார் குறிப்பிடுகிறார்கள்.

எதுவாயினும் இத்தனை அளவில் எரிவாயுவை இயற்கைச்சூழலில் எரித்து அழிக்கும்போது அதனால் சூழல் அசுத்தமாகும் அபாயம் அதிகமாகும் என்று எச்சரிக்கப்படுகிறது. பெருமளவு எரிவாயு எரிவதால் உண்டாகும் நச்சுக்காற்றானது வளிமண்டலத்தின் கரியமிலவாயு அளவை அதிகரிக்கவைக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *