மூன்றிலொரு பங்கு நீருக்குள் மூழ்கியிருக்கும் பாகிஸ்தான் 160 மில்லியன் டொலர் உதவி கோருகிறது.
வழக்கமான வருடங்களை விட மிக அதிகமான மழைவீழ்ச்சியால் பாகிஸ்தானின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்துஸ் நதியின் நீர்மட்டம் மழை வீழ்ச்சியால் மட்டுமன்றி அதன் வழியிலிருக்கும் நிரந்தரப் பனிமலைகளில் மேலதிக வெம்மையாலும் மிகவும் உயர்ந்திருக்கிறது. பாகிஸ்தானின் நீர்த்தேவைக்கு மிக முக்கியமான அந்த நதியின் வீச்சே பெரும் மழையுடன் சேர்ந்து நாட்டின் மூன்றிலொரு பகுதியை நீரால் மூழ்கவைத்திருக்கிறது.
மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் பல நீரால் சூழப்பட்டிருப்பதால் சுமார் 33 மில்லியன் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சுமார் 1,100 பேர் வெள்ளத்தின் பாதிப்பால் இறந்திருக்கிறார்கள். வீடுவாசல் இழந்து சுமார் அரை மில்லியன் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். பல பகுதிகளில் போக்குவரத்துக்கான வழிகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன.
சுமார் 160 மில்லியன் டொலர் பெறுமதியான சேதத்தை பாகிஸ்தான் அடைந்திருப்பதாக நாட்டின் அரசும், ஐ.நா-வின் கணிப்பும் குறிப்பிடுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசியமான தேவைகளைப் பூர்த்திசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவிருப்பதாக ஐ.நா-வின் உணவு உதவி அமைப்பு அறிவித்திருக்கிறது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காலத்தில் பாகிஸ்தான் கேட்டிருந்த 6 பில்லியன் டொலர் கடனில் 1.1 பில்லியன் டொலரை பாகிஸ்தான் அரசுக்குக் கொடுக்கப்போவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருக்கிறது. இம்ரான் கான் அரசு சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுப்பதற்காகப் போட்டிருந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தால் அத்தொகையைக் கொடுக்க இதுவரை மறுக்கப்பட்டு வந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்