முக்தடா சாதிர், அரசியலிலிருந்து விலகியதால் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் ஈராக்கில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது.

ஈராக்கில் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் நாட்டின் அரசியல் ஸ்தம்பித்திருக்கும் நிலைமை வன்முறையாக மாறியிருக்கிறது. நாட்டின் ஷீயா மார்க்க மக்களிடையே பெரும் ஆதரவு பெற்றிருக்கும் முக்தடா சாதிர் அரசியல் வாழ்விலிருந்து தான் விலகுவதாக அறிவித்தார். அதையடுத்து அவர்களது ஆதரவாளர்களும் மற்ற அரசியல் தரப்பினரும் மோதலில் இறங்கியிருப்பதால் வன்முறை உயிர்களைக் குடிக்க ஆரம்பித்திருக்கிறது.

தலைநகரான பாக்தாத்தின் பாதுகாப்பு வலயத்துக்குள் முக்தடா சாதிர் ஆதரவாளர்கள் நுழைந்தனர். அவர்களுக்கும் ஈரானிய ஆதரவு ஷீயா மார்க்க அரசியல் ஆதரவாளர்களுக்குமிடையே துப்பாக்கிச் சண்டையும் மோதல்களும் நடந்து வருகின்றன. சுமார் 30 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். போராட்டக்கார்கள் நாட்டின் ஜனாதிபதியின் மாளிகைக்குள்ளும் நுழைந்திருக்கிறார்கள். அங்கேயிருக்கும் நீச்சல் தடாகத்துக்குள்ளே இறங்கியும், மாளிகையின் உல்லாசத் தளபாடங்களைப் பாவித்தும் அவர்கள் வெளியிட்டிருக்கும் படங்கள் சமூகவலைத்தளங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.

ஈராக்கில் ஏற்பட்டிருக்கும் கலவரமானது கைமீறிப்போகலாம், நாட்டில் உள்நாட்டுக் கலவரம் உண்டாகலாம் என்று ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஈரான் ஆகிய நாடுகள் கவலை தெரிவித்தும், எச்சரிக்கை விட்டும் இருக்கின்றன. அரசியலில் வெவ்வேறு அணியைச் சேர்ந்தவர்கள் ஒன்றுசேர்ந்து பேசி உடனடியாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திங்களன்று நாடெங்கும் நிலைமை மோசமாகித் தலைநகரில் துப்பாக்கி மோதல்கள் நடந்ததால்  ஈராக்கிய இராணுவம் நாடெங்கும் ஊரடங்குச்சட்ட உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. செவ்வாயன்று தலைநகர வீதிகள் வெறிச்சோறியிருப்பதாகவும் ஆங்காங்கே துப்பாக்கிச் சத்தங்கள் கேட்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. முக்தடா சாதிர் இதற்கு முன்னரும் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டுப் பின்னர் அதை வாபஸ் பெற்றிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *