விலையேற்றங்களால் பாதிக்கப்பட்ட ஸ்பெய்ன் குடிமக்களின் பாரத்தைக் குறைக்க இலவசப் பயணங்கள்.
கோடை விடுமுறை ஆரம்பிக்க முதலேயே மிகக்குறைந்த விலையில் இலவச ரயில் பயணங்களுக்கு தனது நாட்டில் ஒழுங்குசெய்தது ஜேர்மனிய அரசு. எரிசக்தி விலைகள் எண்ணாத உயரத்தை நோக்கிப் பறக்க ஆரம்பித்ததால் ஏற்பட்ட விலையேற்றங்களை எதிர்கொள்ள ஜேர்மனிய அரசு அந்த நடவடிக்கையை அறிமுகம்செய்தது. ஸ்பெய்ன் அரசு அதே காரணத்துக்காக இலவசப் பயணங்களை அமுல்படுத்தியிருக்கிறது.
தமது சொந்த வாகனங்களைப் பாவிப்பதை முடிந்தவரை தவிர்த்து பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யத் தூண்டுவதே தாம் இலவசப் பயணச்சீட்டுகளைக் கொடுப்பதன் உத்தேசம் என்று ஸ்பெய்ன் அரசு தெரிவித்திருக்கிறது. மாகாணங்களுக்குள் ஓடும் ரயில்களுக்கும், நகருக்குள் ஓடும் பேருந்துகளுக்கும் தேவையான மாதப்பயண அட்டைகள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. அதன் மூலம் எரிபொருள் வாங்குவதை மக்கள் குறைக்கலாம், தனியார் போக்குவரத்தால் உண்டாகும் சூழல் மாசுபாடும் குறையும்.
ஸ்பெய்ன் மக்கள் ஏற்கனவே அரை மில்லியன் மாதப்பயண அட்டைகளைப் பெற்றிருக்கிறார்கள். இவ்வருட இறுதிவரை தொடரவிருக்கும் இந்த நடவடிக்கை சுமார் 75 மில்லியன் இலவசப் பயணங்களைக் கொடுக்கும் என்று கணிக்கப்படுகிறது.
ஜேர்மனிய அரசு அறீமுகம் செய்திருந்த குறைந்த விலை ரயில் பயணச்சீட்டுகளின் விளைவு மிகவும் நல்ல பலனை அடைந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அது மேலும் ஒரு மாதம் தொடரும்.
சாள்ஸ் ஜெ. போமன்