தென்னாபிரிக்க ஜனாதிபதி ரமபோசாவின் ஊழல் பற்றி ஆராயப் பாராளுமன்றக் குழு.
தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலாவுக்குப் பின்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்றவர்கள் ஒவ்வொருவர் மீதும் லஞ்ச, ஊழல்கள், சட்ட மீறல்கள் குற்றஞ்சாட்டப்பட்டு அவமானத்துக்குள்ளாகினார்கள். நாட்டின் விடுதலைப் போரில் பங்கெடுத்த முக்கிய தலைவர்களான அவர்கள் பதவி கிடைத்ததும் தமது சகாக்களுடன் சேர்ந்து உயர்மட்ட அளவில் ஊழல்கள் செய்தமை வெளியாகியது. அந்த வரிசையில் தற்போதைய ஜனாதிபதி சிரில் ரமபோசா மீது ஊழல்கள் செய்ததாகக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டதை அடுத்து அவற்றை விசாரிக்கப் பாராளுமன்றம் குழுவொன்றை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் நீதிபதிகள் இருவர், பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் உட்பட்ட மூன்று பேர் அடங்கிய குழுவொன்றைத் தென்னாபிரிக்கப் பாராளுமன்றம் ரமபோசா மீது சுமத்தப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் கையிருப்புப் பற்றிய விபரங்களை விசாரிக்கவிருக்கிறது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சி ஒன்றின் மூலம் எழுப்பப்பட்ட பிரேரணையே விசாரணைக் குழு உண்டாக்கும் முடிவை எடுக்கவைத்தது.
நாட்டின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் பதிவுசெய்த விபரமொன்றில் ரமபோசாவின் உல்லாச வீடு ஒன்றினுள் கள்வர்கள் நுழைந்து அங்கிருந்த தளபாடங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 மில்லியன் டொலர்கள் நோட்டுக்களைக் களவாடியதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த நிகழ்ச்சியை ரமபோசா பொலீசாரிடம் தெரிவிக்காமல் அக்கள்வர்களைக் கடத்திச் சென்று விசாரித்து அவர்களுக்குப் பணம் கொடுத்து அவர்களின் வாயை அடைத்துவிட்டார் என்று குறிப்பிடப்படுகிறது.
ஜூன் மாதத்தில் அவ்விபரங்கள் வெளியாகியதை அடுத்து அதன் மீதான விசாரணை நடத்த முயன்ற ஊழல் கண்காணிப்பு அதிகாரியை ரமபோசா அடுத்த நாளே பதவியிலிருந்து விலக்கினார். அதைப் பற்றி விசாரித்த உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட பதவி விலக்கல் தவறானது என்று தீர்ப்பளித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்