கிழக்கு உக்ரேனின் விடுவிக்கப்பட்ட சிறீலங்காவைச் சேர்ந்தவர்கள் ரஷ்யர்களால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டனர்.
சமீபத்தில் உக்ரேன் இராணுவம் தனது தாக்குதல்கள் மூலம் ரஷ்யா தம்மிடமிருந்து கைப்பற்றி வைத்திருந்த சில பகுதிகளை மீளக் கைப்பற்றியது தெரிந்ததே. அச்சமயத்தில் கார்க்கிவ் நகர்ப்பகுதியின் தொழிற்சாலைக்கட்டடமொன்றுக்குள் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த சிறீலங்காவைச் சேர்ந்த ஏழு பேர் விடுதலைசெய்யப்பட்டனர். அங்கே மாதக்கணக்காக ரஷ்ய இராணுவத்தினரின் கைதிகளாக இருந்த தம்மை அவர்கள் சித்திரவதை செய்ததாக விடுவிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
குப்பியான்ஸ்க் நகரில் சிறீலங்கா குடிமக்களான அவர்களில் நால்வர் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் கற்று வந்தனர். மற்றவர்கள் அந்த நகரில் தொழிலாளர்களாக இருந்தனர். அந்த நகர் ரஷ்யர்களிடம் வீழ்ந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டு வொவ்ச்சான்ஸ்க் என்ற நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டு சுமார் 20 உக்ரேனியர்களுடன் சிறைவைக்கப்பட்டிருந்தனர். அந்தத் தொழிற்சாலை ரஷ்யர்களின் சித்திரவதைக்கூடங்களில் ஒன்றாகப் பாவிக்கப்பட்டதாக உக்ரேன் பொலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
டிலுக்சன் ரொபேர்ட் கிளைவ் என்பவர் தாம் தினசரி மலசலகூடங்களைத் துப்பரவு செய்வதற்காக வற்புறுத்தப்பட்டதாகவும் சில சமயங்களில் ரஷ்ய இராணுவத்தினர் தம்மை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறியிருக்கிறார். சிறைக்குள்ளாக்கப்பட்டிருந்த அவர்களின் கடவுச்சீட்டுக்கள் உட்பட்ட உடமைகள் பறித்தெடுக்கப்பட்டிருந்தன.
ஏழு பேரில் ஒருவர் பெண்ணாகும். அவரைத் தனியாக இருண்ட அறையொன்றுக்குள் அடைத்து வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார். இன்னொருவரின் காலில் துப்பாக்கியால் ரஷ்யர்கள் சுட்டுக் காயப்படுத்தியிருந்தனர். மொழி தெரியார்ததால் கூட இருந்த மற்றைய உக்ரேனியர்களுடன் தாம் பேச முடியவில்லையென்றும், ரஷ்ய இராணுவத்தினர் தம்மை வெவ்வேறு வேலைகள் செய்வதற்காக உத்தரவிட்டபோதும் தாம் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் விசாரணையின்போது குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்காக ரஷ்யர்கள் தம்மை அடித்துத் துன்புறுத்தியதாகவும் ஞானேஸ்வரன் என்ற இன்னொருவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ரஷ்யர்கள் அந்தப் பிராந்தியத்தைப் போரில் இழந்து வெளியேறியபோது கைதிகள் அவர்களிடம் தமது கடவுச்சீட்டுக்களைத் திருப்பித் தரும்படி மன்றாடியும்கூட அவர்கள் அதைக் கொடுக்கவில்லை. கடவுச்சீட்டுக்கள் இல்லாமல் உணவு, நீரின்றித் தவித்த சிறீலங்காவைச் சேர்ந்த அவர்கள் இரண்டு நாட்கள் நடந்தே கார்க்கிவ் நகரை அடைந்திருக்கிறார்கள். வீதியோரங்களில் அவர்கள் ஓய்வெடுத்துத் தூங்கியிருக்கிறார்கள்.
இறுதியாக அவர்கள் வழியில் உதவி பெற்று உக்ரேனிய அதிகாரிகளிடம் கார்க்கிவ் நகரில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மாதக்கணக்கான சித்திரவதைகளின் பின்னர் தாம் மனோநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உழல்வதாக ரொபேர்ட் கிளைவ் தெரிவித்திருக்கிறார். தாம் உயிர்தப்பப்போவதில்லை என்றே நம்ப ஆரம்பித்திருந்ததாகவும் ஒரு வழியாகக் உதவி பெற்று நன்றாகக் கவனிக்கப்படுவதாகவும் அவர்கள் பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்