சீறிவரும் சூறாவளி கியூபா முழுவதையும் மின்சாரமில்லாமல் ஆக்கியிருக்கிறது.
கடும் காற்றுச் சுழன்று வீச, சீறியடிக்கும் மழைச்சாரலுடன் கியூபாவின் மேற்குப் பகுதியின் ஊடாக நாட்டில் நுழைந்திருக்கிறது. புதனன்று மாலையில் புளோரிடாவை அடையவிருக்கும் இயன் என்று பெயரிடப்பட்டிருக்கும் சூறாவளியின் தாக்குதலால் இருவர் மரணமடைந்திருப்பதாகக் கியூபாவின் உத்தியோகபூர்வமான அறிக்கை தெரிவிக்கிறது. பெரும் மோசமான விளைவாக சூறாவளி நாட்டின் 11 மில்லியன் பேருக்கும் மின்சார வசதி அற்றுப் போயிருக்கிறது.
மணிக்குச் சுமார் 220 கி.மீ வேகத்தில் வீசியடிக்கும் சூறாவளிக்காற்று ஆபத்து அளவில் ஐந்தில் நாலாவது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அதன் வேகம் மேலும் அதிகரித்துக்கொண்டிருப்பதால் ஆபத்தில் ஐந்தாவது இடத்தைத் தொடுமளவுக்கு அழிவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிடுகிறது.
கியூபாவின் மேற்குப் பகுதி பெரும்பாலும் நீரால் மூடப்பட்டிருக்கிறது. நாட்டின் உலகப் புகழ்பெற்ற சுருட்டுக்களுக்கான புகையிலை விவசாயம் நடக்கும் இடமான பினார் டெல் ரியோ மிக மோசமாகத் தாக்கப்பட்டிருக்கிறது. எனவே, அது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. அப்பகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மிகுவல் டயஸ் கனல் அந்த நகரை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதாக உறுதி கூறியிருக்கிறார்.
புளோரிடாவை நோக்கி நகரும் இயன் அங்கே டம்பா பிராந்தியத்தை வெள்ளத்தை உண்டாக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா, ஜியோர்ஜியா மாநிலங்கள் இரண்டும் அவசரகால நிலைப் பிரகடனம் செய்திருக்கின்றன. இராணுவத்தினரில் ஒரு பகுதியினர் மீட்புப்படையினருடன் சேர்ந்து செயற்படத் தயாரான நிலையிலிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்