ஷீயா மார்க்கத்தினர் வாழும் காபுல் பகுதியில் கல்விக்கூடமொன்றில் குண்டு வெடித்துப் 35 பேர் மரணம்.
வெள்ளியன்று காலையில் காபுல் நகரின் மேற்குப் பகுதியில் இருக்கும் கல்விக்கூடமொன்றில் குண்டு வெடித்தது. ஷீயா மார்க்கத்தினரே பெருமளவில் வசிக்கும் அந்த நகர்ப்பகுதியில் அதனால் இறந்தோர் எண்ணிக்கை 35 பேராகும். அங்கே நடக்கவிருந்த பரீட்சையொன்றில் பங்கெடுக்க மாணவர்கள் தயாராகிக்கொண்டிருக்குபோதே அந்தக் குண்டு வெடித்திருக்கிறது. மேலும் 27 பேர் காயப்பட்டிருக்கிறார்கள்.
சமூகவலைத்தளங்களிலும், உள்ளூர் இணையத்தளங்களிலும் குண்டு வெடித்ததனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவசாலைக்குக் கொண்டு செல்லப்படும் படங்களும், இரத்தக்களரியான இடத்தின் படங்களும் வெளியாகியிருக்கின்றன.
டாஷ்த் ஏ பர்ச்சி என்ற அப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் ஓரவஞ்சனைக்கு உட்படுத்தப்படும் இனத்தினரான ஹசாராக்கள் பலர் வாழ்கிறார்கள். அந்த நாட்டின் பெரும்பான்மையினரான சுன்னி இஸ்லாம் மார்க்கத்தினரின் தீவிரவாதிகள் ஹசாராக்கள் மீது குறிவைத்துத் தாக்குவது இது முதல் தடவையல்ல. பொதுவாகவே ஷீயா மார்க்கத்தினரான அவர்கள் வாழும் பகுதிகளிலிருக்கும் பள்ளிவாசல்கள் உட்பட பல பகுதிகளிலும் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்ற முன்னரும், பின்னரும் கூடத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இதே பகுதியில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்ற முன்னர் ஒரு பெண்கள் பாடசாலையை அடுத்து வெடித்த குண்டுகளில் 85 பேர் கொல்லப்பட்டு, 300 க்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள். இவ்வருடம் ஏப்ரல் மாதத்திலும் வெவ்வேறு குண்டுகள் இரண்டு கல்விக்கூடங்களில் வெடித்து 25 க்கும் அதிகம் பேரின் உயிர்களைப் பறித்தது. மே 2020 இல் மருத்துவமனையொன்றில் குழந்தைகள் பிறக்கும் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பால் பிள்ளை பெற்ற பெண்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர்.
காபுலின் முக்கிய அரச அதிகாரங்களில் இருக்கும் பகுதியில் கடந்த வெள்ளியன்று குண்டொன்று வெடித்து ஏழு பேர் கொல்லப்பட்டனர். தலிபான்களின் பிரத்தியேக கட்டுப்பாட்டில் இருக்கும் அப்பகுதிப் பள்ளிவாசலில் வெள்ளிப்பிரார்த்தனைகள் நடந்து முடிந்ததும் வெடித்த குண்டு மேலும் 42 பேரைக் காயப்படுத்தியிருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்