ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பால் எட்டுப் பேர் மரணம் 57 பேர் காயமடைந்தார்கள்.

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியிலிருக்கும் ஹெராத் மாகாணத்தில் குண்டு வெடித்ததால் எட்டு பேர் மரணமடைந்திருப்பதாகவும் சுமார் 57 பேர் காயமடைந்திருப்பதாகவும் அப்பிரதேசப் பொலீஸார் தெரிவிக்கின்றனர். அக்குண்டை வைத்தது யாரென்று இதுவரையும் எவரும் பொறுப்பேற்கவில்லை.

வெள்ளியன்று மாலை நடந்திருக்கும் இத்தாக்குதலில் குண்டு வெடிக்கப்பட்ட பகுதியில் சுமார் 12 வீடுகளும் சிதைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு இராணுவச் சிப்பாய் இறந்ததாகவும் காயப்பட்டவர்களில் பலர் பெண்களும், குழந்தைகளும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 கத்தாரில் ஆப்கான் அரசுக்கும் தலிபான்களுக்கும் நடந்துகொண்டிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில் தமது கை ஓங்கியிருக்கிறது என்று காட்டவே பொது மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகக் கருதப்படுகிறது. நாட்டின் அரச ஊழியர்கள், ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள், மருத்துவ சேவையாளர்கள், நீதித் துறைப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலத்தில் அதிகரித்திருக்கிறது. 

நடந்திருக்கும் பல தாக்குதல்களுக்கும் ஐ.எஸ் என்று அழைக்கப்படும் இஸ்லாமியக் காலிபாத் அமைக்கப் போராடும் தீவிரவாதிகள் பொறுப்பு என்று அவர்களே குறிப்பிட்டு வந்தாலும், அரசும், தலிபான் போர்க்குழுக்களும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றன.

கத்தாரில் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஆப்கானிஸ்தானின் தொடர்ந்த பேச்சுவார்த்தை மேலும் சில வாரங்களில் துருக்கியில் தொடரவிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்த அமைதி வேண்டுமானால் அங்கிருக்கும் வெளிநாட்டு இராணுவம் முழுவதுமாக “டிரம்ப் உறுதி கூடிய ஒப்பந்தத்தின்படி” வெளியேறவேண்டுமென்கிறார்கள் தலிபான்கள். ஆனால், சமீப காலத்தில் அதிகரித்துவரும் கொலைகளால் அங்கு மிச்சருக்கும் நாட்டோ படைகளைப் பின்வாங்குவது கேள்விக்குறியாகியிருக்கிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *