ஜேர்மனியினுடாகச் செல்லும் ஓடர் நதியில் தொன்கள் கணக்கில் மீன்கள் இறந்த காரணம் மனித நடத்தையே!
போலந்து – ஜேர்மனி நாடுகளுக்கூடாகச் செல்லும் ஓடர் நதியில் ஆகஸ்ட் மாதத்தில் திடீரென்று கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் மீன்கள் இறந்துபோயிருக்கக் காணப்பட்ட காரணத்தை ஜேர்மனி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. சுமார் 300 தொன் மீன்கள் இறந்துபோகக் காரணம் நதியில் திடீரென்று உப்புத்தன்மை அதிகரித்ததாகும். நச்சுத்தனமான பாசியொன்று அந்தத் திடீர் உப்பு அதிகரிப்புக்குக் காரணமாக இருந்தது.
ஓடர் நதியிலிருந்து ஜேர்மனிய சுற்றுப்புற சூழல் அதிகாரத்தினர் சுமார் 300 தொன் இறந்த மீன்களை அள்ளியெடுத்துப் புதைத்தனர். அதையடுத்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவாக நீரில் திடீரென்று ஏற்பட்ட உப்புத்தன்மை அதிகரிப்பே அவற்றின் இறப்புக்குக் காரணம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. அந்தத் திடீர் மாற்றத்துக்கான காரணம் எங்கிருந்து வந்தது என்பதை அறிய அவர்களால் முடியாவிட்டாலும் அது நிச்சமாக மனிதர்களின் நடவடிக்கையே என்று அறுதி முடிவு எடுக்கப்பட்டது.
மீன்களின் இறப்புப் பற்றி போலந்து – ஜேர்மனி நாடுகளுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. தமது ஆராய்வுக்குத் தேவையான விபரங்களைத் தர போலந்து மறுத்ததாக ஜேர்மனி குற்றஞ்சாட்டுகிறது. படிப்படியாக போலந்து சூழல் பற்றிய விபரங்களில் ஒத்துழைப்பு நல்க மறுத்து வருவதுடன், இரகசியம் காக்க முற்படுவதாகவும் ஜேர்மனிய அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்