ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் கௌரவப் பதக்கத்தைப் பெற்றார் அஞ்செலா மெர்க்கல்.
2015 , 2016 ம் ஆண்டுக்காலத்தில் உள்நாட்டிலும், சுற்றிவர உள்ள நாடுகளிலும் ஏற்பட்ட எதிர்ப்புகளைக் கண்டு பின்வாங்காமல் ஒரு மில்லியன் பேருக்கும் அதிகமான அகதிகளை ஜேர்மனிக்குள் வரவேற்றதற்காக முன்னாள் ஜேர்மனியப் பிரதமர் அஞ்செலா மெர்க்கலுக்கு நான்சென் அகதிகள் பதக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா-வின் அகதிகள் அமைப்பின் பேச்சாளர் மத்தேயு சால்ட்மார்ச் அந்தச் செய்தியைத் தெரிவித்தார்.
“சிரியாவின் உள்நாட்டுப்போர் படுமோசமாக இருந்த சமயத்தில் உலகின் வேறு போர்களும் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தன. அச்சமயத்தில் பாதிக்கப்பட்டு வாழ்விடம் தேடியவர்களின் பிரச்சினையை உலகளவில் தெரியப்படுத்துவதில் மெர்க்கல் முக்கிய பங்கு வகித்தார். ஜேர்மனியில் சுமார் 1 – 1,2 மில்லியன் அகதிகளை வரவேற்று வாழவைத்தார்,” என்று மெர்க்கலுக்காகப் பரிசு கொடுக்கப்படுவதன் காரணத்தை சால்ட்மார்ச் குறிப்பிட்டார்.
150,000 அமெரிக்க டொலர் பணமுடிப்பையும் கொண்ட அப்பரிசைப் பெற்றுக்கொள்ள அடுத்த வாரம் அஞ்செலா மெர்க்கல் ஜெனிவாவுக்குப் பயணிக்கவிருக்கிறார். அந்தப் பரிசு தமது கடமைகளுக்கெல்லாம் மேலாக நாடற்றவர்களுக்கு வாழ வசதி செய்து கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. அது நோர்வீஜியரான பிரிசொப் நான்சென் என்பவரின் ஞாபகார்த்தமாக வருடாவருடம் கொடுக்கப்படுகிறது. இதுவரை சுமார் 60 பேர் அந்தக் கௌரவப் பரிசைப் பெற்றிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்