இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்குக் கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பிரான்ஸைச் சேர்ந்த அலைன் அஸ்பெக்ட், ஆஸ்திரியரான அண்டன் ஸெல்லிங்கர், அமெரிக்கரான ஜோன் க்ளௌசர் ஆகிய மூவருக்கும் சேர்த்து இவ்வருடத்துக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பரிசு பெற்ற மூவருமே நீண்ட காலமாக இத்துறையில் துலங்கிவருகிறார்கள். மூவருமே 75 வயதுக்கும் அதிகமானவர்களாகும். ஸ்டொக்ஹோம் நகரின் விஞ்ஞானத்துறைக்கான மத்திய கலைக்கூடத்தில் அச்செய்தி அக்டோபர் ஐந்தாம் திகதியன்று அறிவிக்கப்பட்டது.

குவாண்டம் இயக்கவியல் துறையில் அந்த மூவரும் தமது வழியில் தனித்தனியாகச் செய்த ஆராய்ச்சிகள் அத்துறையில் தொடர்ந்தும் மற்றவர்களுக்குத் திறந்துவைத்த பாதைகளுக்காகவே இவ்வருடப் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு பொருளின் நகர்விற்கு அதன் துகள்களின் பின்னிப்பிணைந்த நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் எந்த அளவில் காரணமாக இருக்கிறது என்பதைப் பற்றியே அவர்களின் ஆராய்ச்சிகள் அமைந்திருக்கின்றன. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னரே அவர்கள் குறிப்பிட்ட துறையிலான ஆராய்ச்சிகள் மூலம் பல நன்மைகளை இயல்பியலுக்கு வழங்கியிருக்கிறார்கள்.  

குவாண்டம் கணிகளின் தொழில்நுட்பம், குவாண்டம் தொலைத்தொடர்புகளின் தொழில்நுட்பம் ஆகியவைகளின் தொடர்ந்த வளர்ச்சிக்கு அவர்களுடைய கண்டுபிடிப்புகள் பெரும் உதவியாக இருந்து வருகின்றன. வெறும் கண்ணுக்குத் தெரியாத  குறிப்பிட்ட இரண்டு துகள்கள் பின்னிப்பிணைந்த நிலையில்  நகர்தல்  எப்படியான மாற்றங்களை அதிதூரத்திலிருக்கும் மற்றைய துகள்களின் நகர்தலில் உண்டாக்கி மொத்தமான சங்கிலித் தொடர்பில் என்னென்ன விளைவுகளை உண்டாக்குகின்றன என்பதை இந்த மூவரின் ஆராய்ச்சிகள் விளக்குகின்றன.

இதுவரை 115 நோபல் பரிசுகள் இயற்பியலுக்காக வழங்கப்பட்டிருக்கின்றன. மொத்தமாக 218 பேர் இத்துறையில் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் 96 பேர் அமெரிக்கர்களாகும்.பெண்கள் நோபல் பரிசுகளை அதிகுறைவாகப் பெற்றிருப்பது இத்துறையிலேயாகும். இதுவரை நான்கு பெண்கள் மட்டுமே இத்துறையில் நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *