“கல்வி மீட்பின் இதயமாக ஆசிரியர்கள்”|எங்கள் ஆசிரியர்களை கொண்டாடுவோம்
ஐப்பசி (October) 5
உலக ஆசிரியர் தினம் ( (World Teachers’ Day) என ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 யுனெஸ்கோ / பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பரிந்துரையில் கையெழுத்திட்டதை நினைவுகூறும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது.
செப்டம்பர் 5ல் இந்தியாவில் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுவதை போல சீனாவில் செப்டம்பர் 10, ஈராக்கில் மார்ச் 1, மலேசியாவில் மே 16, சிங்கப்பூரில் செப்டம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, ஸ்பெயினில் நவம்பர் 27 ஆசிரியர்கள் தினம் தனிப்பட்ட முறையில் அந்தந்த நாடுகள் கொண்டாடி வருகிறது.
இருப்பினும் பெரும்பாலான நாடுகள் 1994ல் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட அக்டோபர் 5ஐ உலக ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றன.
சர்வதேச ஆசிரியர் நாள் “உலகின் கல்வியாளர்களைப் பாராட்டுதல், மதிப்பீடு செய்தல் மற்றும் மேம்படுத்துதல்” ஆகியவற்றில் கவனம் செலுத்துவதையும் ஆசிரியர்களுக்கான சிக்கல் மற்றும் கற்பித்தல் தொடர்பான சிக்கல்களைக் கருத்தில் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச ஆசிரியர் நாளினைக் கொண்டாடுவதற்காக, யுனெஸ்கோ மற்றும் சர்வதேச கல்வி அமைப்பு (ஈஐ) ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றன. அதன்மூலம் ஆசிரியர்களைப் பற்றிய சிறந்த புரிதலையும், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் அவர்கள் வகிக்கும் பங்கையும் உலகிற்கு வழங்க உதவுகிறது.
இந்த நோக்கத்தை அடைய அந்த அமைப்பு ஊடக நிறுவனங்கள் போன்ற தனியார் துறையுடன் இணைந்து செயல்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள்களில் இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது.
உதாரணமாக, “ஆசிரியர்களை மேம்படுத்துதல்” என்பது 2017 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள். உயர்கல்வி கற்பித்தல் பணியாளர்களின் நிலை தொடர்பான 1997 யுனெஸ்கோ பரிந்துரையின் 20 வது ஆண்டின் நிறைவை உலக ஆசிரியர் தினம் நினைவுகூறுவதற்காக இந்தப் பிரச்சாரம் நடைபெற்றது.
2018 ஆம் ஆண்டு யுனெஸ்கோ “கல்விக்கான உரிமை என்பது தகுதியான ஆசிரியருக்கான உரிமை” எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது.
இது மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (1948) 70 வது ஆண்டு நிறைவை நினைவுகூர்கிறது மற்றும் பயிற்சி பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாமல் கல்விக்கான உரிமையை உணர முடியாது என்பதை நினைவூட்டுகிறது.
இந்த ஆண்டிற்கான கருப்பொருள்:
2022 உலக ஆசிரியர் தினத்தின் கருப்பொருள், ‘கல்வி மீட்பின் இதயமாக ஆசிரியர்கள்’ (Teachers at the Heart of Education Recovery) என்பதாகும்.
இந்த கருப்பொருள் கோவிட் -19 தொற்று போன்ற இடர்பாடுகளின் போது கூட மாணவர்களுக்கு கற்பிக்க தொடர்ந்து உழைத்த மற்றும் உழைத்து வரும் ஆசிரியர்களை அங்கீகரிக்கிறது.
தவிர இந்த ஆண்டு உலக ஆசிரியர் தினம் இந்த கருப்பொருளின் கீழ் COVID-19 தொற்றுநோயிலிருந்து மீட்பு செயல்முறைக்கு ஆசிரியர்கள் முழுமையாக பங்களிக்க வேண்டிய ஆதரவில் கவனம் செலுத்தும்.
இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள UNESCO அமைப்பு, 5 நாள் உலகளாவிய மற்றும் பிராந்திய தொடர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், இவை ஆசிரியர் தொழிலில் கோவிட் -19 ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்தும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
எழுதுவது : டொமினிக், தமிழ்நாடு