உலகக்கோப்பைப் போட்டிகளுக்குப் பாதுகாப்பாக துருக்கிய இராணுவம் கத்தாருக்கு அனுப்பப்படும்.
இவ்வருடம் நவம்பர் மாதம் கத்தாரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டத்துக்கான உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கும் சமயத்தில் பாதுகாப்பு அளிக்க கத்தாருக்குத் தனது இராணுவத்தை அனுப்பவிருக்கிறது துருக்கி. உலகக்கோப்பை மோதல்கள் நடக்கும் சமயத்தில் தீவிரவாதம் உட்பட்ட பல ஆபத்துக்களை எதிர்கொண்டு உதவத் தமக்குப் பாதுகாப்பு வேண்டி கத்தாரிடமிருந்து வந்த வேண்டுதலைத் துருக்கிய பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கோப்பைக்கான பந்தயங்களை நடக்கும்வரையான ஆறு மாதங்களுக்குத் துருக்கிய இராணுவம் கத்தாரிலிருக்கும்.
அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய ராச்சியம், இத்தாலி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் இராணுவத்தினரும் உலகக்கோப்பைப் பந்தயங்கள் நடக்கும் சமயத்தில் கத்தாரில் பாதுகாப்புக்காக உதவுவார்கள். கத்தாரில் ஒரு இராணுவத் தளத்தை ஏற்கனவே கொண்டிருக்கிறது துருக்கி. 2017 ஆண்டு கத்தாரின் பக்கத்து நாடுகளான சவூதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரேன் ஆகிய நாடுகள் கத்தாருடன் தமது அரசியல், நல்லெண்ணத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டனர். கத்தாருடன் தமக்கிடையேயான எல்லைகளையும் மூடிக்கொண்டனர். அச்சமயத்தில் கத்தாருக்குப் பெரும் ஆதரவை வழங்கியது துருக்கி.
சுமார் 3 மில்லியன் பேர் வாழும் கத்தாரில் 380,000 பேர் மட்டுமே கத்தார் குடிமக்களாகும். நடக்கவிருக்கும் கால்பந்தாட்ட மோதல்களைக் கண்டுகளிக்க சுமார் 1.2 மில்லியன் பேர் கத்தாருக்கு விஜயம் செய்வார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்