மியான்மாரில் ரோஹின்யா- இன அழிப்புக்கு பேஸ்புக் பதிவுகள் உடந்தையாக இருந்தன என்கிறது அம்னெஸ்டி அமைப்பு.
பேஸ்புக் பதிவுகள் பல மியான்மார் இராணுவம் 2017 இல் முஸ்லீம் சிறுபான்மையினரைக் குறிவைத்து அழிப்பதற்கு உதவியாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது அம்னெஸ்டி இண்டர்நஷனல். மியான்மாரின் ரோஹின்யா சிறுபான்மையினரைப் பற்றிய பொய்யான செய்திகளை வெளியிட்டு அவர்கள் மீது மியான்மாரின் மற்றைய இனத்தவருக்கு வெறுப்பேறி, உசுப்பேற்றும் பல பதிவுகள் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டன. அவற்றைப் பேஸ்புக் அகற்றாததால் அவ்வினத்தவர் மீதான கொடூரமான வன்முறைகள் அசட்டைசெய்யப்பட்டன.
இதுபற்றி 2018 இல் பேஸ்புக் ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டிருந்தது. தாம் ரோஹின்யா இனத்தவரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை இயன்றழவு எடுக்கவில்லை என்று பேஸ்புக் நிர்வாகம் அச்சமயத்தில் ஒத்துக்கொண்டிருந்தது. அம்னெஸ்டி தற்போது வெளியிட்டிருக்கும் விபரங்கள் பேஸ்புக் பாவிக்கும் சொற்கள், அவற்றைப் பரப்பும் வழிமுறைகள்[algorithm] ரோஹின்யாக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மியான்மார் இராணுவத்துக்குத் தீவிரமான உதவிகளைச் செய்தன என்று விபரமாகக் காட்டுகின்றன.
மியான்மார் இராணுவத்தின் முக்கிய புள்ளிகள், தீவிரவாதப் புத்தபிக்குகள் திட்டமிட்டு ரோஹின்யாக்கள் பற்றிய பொய்யான விடயங்களை வெளியிட்டு வெறுப்பைப் பரப்பினார்கள். மியான்மாரை முஸ்லீம்கள் கைப்பற்றும் காலம் நெருங்கிவருவதாக அவர்கள் எழுதியிருந்தார்கள். தற்போதைய மியான்மார் தலைவர் மின் ஔங் ஹிலாங்கும் அவர்களில் ஒருவராகும்.
அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் ஆகியவற்றில் பேஸ்புக்கின் மியான்மார் ரோஹின்யா இனத்தவர் பற்றிய கையாளல் பற்றிய பல வழக்குகள் நடந்து வருகின்றன. அவற்றில் சில பேஸ்புக்கின் தந்தை நிறுவனம் மெத்தாவானது ரோஹின்யா இனத்தவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்று கோரியிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்