தனது பிரதமர் பதவி பறிபோகாமல் காப்பாற்ற, லிஸ் டுருஸ் தனது நிதியமைச்சரைப் பலி கொடுத்தாரா?
பதவியேற்றவுடன் தனது மிக முக்கிய திட்டத்தின் கரு என்று கூறிச் சமர்ப்பித்த வரிக்குறைப்புகளை, ஒரே மாதத்துக்குள் வாபஸ் வாங்கிய லிஸ் டுருஸ் தனது பொருளாதாரத் திட்டத்தின் அச்சாணியாக இருந்த நிதியமைச்சர் கிவாசி கிவார்ட்டாங்கை இன்று பதவியை விட்டு விலக்கினார். விலகும் நிதியமைச்சரே தன் மீதான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னைப் பதவியை விட்டு விலக்கியதாக அறிவித்தார்.
லிஸ் டுருஸ் அரசின் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை நம்பாமல் வர்த்தக உலகு பிரிட்டிஷ் பவுண்டை ஆட்டி வைத்துக்கொண்டிருப்பது தொடர்கிறது. பாங்க் ஒவ் இங்லண்ட் தமது நாணயத்தை ஓரளவாவது நிலையாக வைத்திருக்கக் கடன் பத்திரங்களை வாங்குவதிலும், பவுண்டை வாங்குவதிலும் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அவர்களுடைய நடவடிக்கை போதுமானதாக இல்லையென்று வர்த்தக உலகம் தனது சைகைகளால் காட்டிக்கொண்டேயிருக்கிறது. 1980 இன் பின்னர் பிரிட்டிஷ் பவுண்ட் தற்போதைக்கு இறங்கியிருக்கும் நிலைமைக்கு வந்ததில்லை.
பதவியேற்றபின் முதல் தடவையாக வாஷிங்டனுக்குச் சென்றிருந்த கிவார்ட்டாங் அவசரமாகத் திரும்பி வரவைக்கப்பட்டுப் பலிகொடுக்கப்பட்டார் என்று அரசியல் வட்டாரங்கள் லிஸ் டுருஸ் மீது விமர்சிக்கிறது. முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்த ஜெரோமி ஹண்ட் புதிய நிதியமைச்சராக்கப்பட்டிருக்கிறார். கட்சியின் நீண்டகால நட்சத்திரமான அவர் தெரேசா மே, டேவிட் கமரூன் ஆகியோரின் அரசாங்கங்களில் அமைச்சராக இருந்தவராகும்.
வீழ்ந்துவரும் பிரிட்டிஷ் பொருளாதாரத்தை நிமிர்த்தப்போவதாகச் சொல்லி லிஸ் டுருஸ் முன்வைத்த வரிகுறைப்புகள, நிறுவனங்களுகான வரிகளை ஒத்திவைத்தல், உட்பட்ட பல திட்டங்களைப் பெரும் அவமானத்துடன் பின்வாங்கியிருக்கிறார். அவரது இந்த நடவடிக்கை கட்சிக்குள் அவரது தலைமையைப் பெருமளவில் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. நாட்டில் நடாத்தப்பட்ட அரசியல் ஆதரவுக் கணிப்பீடுகளெல்லாம் டுருஸ் மீது நம்பிக்கையில்லை என்றும், அவரது கட்சிக்கு வாக்களிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிடுகின்றன.
அடுத்த வாரமே கொன்சர்வடிவ் கட்சிக்குள்ளிருக்கும் சில முக்கிய தலைவர்கள் லிஸ் டுருஸ் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரலாம் என்றும் செய்திகள் கசிந்து வருகின்றன. அவர்களுக்குள் கட்சிக்குள் பலமானவர்களும், டுருஸ் அமைச்சரவையில் இருப்பவர்கள் என்றும் பி.பி.சி செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது. சொந்தக் கட்சிக்குள்ளிருப்பவர்களின் வாக்குகளை வெல்வதற்காக வரி குறைத்தலை டுருஸ் பாவித்தார் என்றும், கிவார்ட்டாங்கை அவர் பலிக்கடாவாக்கியிருக்கிறாரென்றும் முக்கிய தலைவர்கள் கருதுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்