மாசே துங்கின் பின்பு சீனாவின் தீர்க்கதரிசி போன்ற தலைவராகி வரும் ஷீ யின்பிங்.
சீனாவின் மிகப்பெரிய பலம்வாய்ந்த அதிகாரம் நாட்டின் கொம்யூனிஸ்ட் கட்சியாகும். நாட்டின் இராணுவம் கூட கொம்யூனிஸ்ட் கட்சியின் பாதுகாவலர் என்றே பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் மத்திய தலைமைப் பீடத்தின் நிர்வாகத் தலைமையைக் கைப்பற்றுகிறவர் நாட்டின் தலைவராகிறார். ஐந்து வருடத் தவணையுள்ள அப்பதவியில் மாவோவுக்குப் பின்னர் இரண்டு தவணைகள் தான் ஒவ்வொரு தலைவரும் இருந்திருக்கிறார்கள். முதல் தடவையாக மூன்றாவது தவணையும் அமரப்போகிறவர் ஷீ யின்பிங் ஆகும்.
மத நம்பிக்கைகள் அறுக்கப்பட்ட சீனாவில் கொம்யூனிஸ்ட் கட்சியின் ஐந்து வருடங்களுக்கொருமுறை வரும் மிகப்பெரும் மாநாடு மாமாங்கத் திருவிழா போலக் கருதப்படுகிறது. அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டின் தலைவர் யாரென்று தீர்மானிக்கப்படும் அந்த மகா திருவிழா நாளை பீஜிங்கில் ஆரம்பமாகிறது. கட்சிக்குள் தனக்கு எவ்வித எதிரியுமின்றிப் பார்த்துக்கொண்ட ஷீ யின்பிங் மூன்றாவது தவணையும் தலைமை தாங்கத் தன்னை “அர்ப்பணித்துக்கொள்வார்” என்றே சீனாவிலும், சர்வதேச அளவிலும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனது இரண்டு ஆட்சித் தவணைக்காலகட்டத்திலும் நாட்டில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்பதைத் தீர்மானமாகத் திட்டமிட்டு வெளியிட்ட ஷீ அதையே திட்டவட்டமாகப் பின்பற்றி வருவதுடன் கட்சியின் மாநாடுகளில் அவற்றைப் பற்றியும் அதில் எவ்வளவு தூரத்தைச் சீனா எட்டியிருக்கிறது என்பதையும் விபரிப்பவர். ஐந்து வருடங்களுக்கு முன்னரான மா நாட்டில் அதை விபரிக்க அவர் மூன்றரை மணி நேரத்தை எடுத்துக்கொண்டார்.
நாட்டில் வறுமையை ஒழித்தல், தனக்கு முன்னாலிருந்த தலைவர்கள் அறிமுகப்படுத்தியிருந்த சிறிய அளவிலான தனியார் உடமை உரிமையை மாற்றி மீண்டும் அரசே நாட்டின் வளங்களை ஆளுதலை மேம்படுத்துதல், லஞ்ச ஊழல் ஒழிப்பு, இராணுவத்தை நவீனமயமாக்குதல், நாட்டைச் சர்வதேச வல்லரசாக மாற்றுதல், அதிகுறைந்த ஊதிய வேலைகளை ஒழித்துக்கட்டி ஒரு வளமான தொழில் நுட்ப மையமாக்கல் ஆகியவை ஷீ-யின் திட்டங்களாகும்.
தனது திட்டங்களில் பெருமளவில் வெற்றிபெற்றிருக்கும் அவர் லஞ்ச ஊழல்களை ஒழித்தல் எனும் ஆயுதத்தைப் பாவித்துத் தனக்கெதிராக எந்த ஒரு அரசியல்வாதியும் தலையெடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று குறிப்பிடப்படுகிறது. ஒக்டோபர் 16 ம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கு கட்சி மாநாட்டையொட்டி ஊடகங்களும், சக தலைவர்களும் ஷீ யின்பிங்கை ஒரு புதிய தீர்க்கதரிசி என்று போற்றி வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்