ஈரானியச் சிறைக்குள் அதிரடிப்படை நுழைந்து கைதிகளைத் தூண்டிக் கிளர்ச்சி ஏற்படுத்தியது.
ஈரானில் அரசியல் கைதிகள், வெளிநாட்டவர்களை அரசு அடைத்துவைக்கும் ஏவின் சிறைச்சாலைக்குள் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீவிபத்துக்குக் காரணம் பொலிசாருக்கும், சிறையிலிருப்போருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களே என்று குறிப்பிடப்படுகிறது. குறிப்பிட்ட தீவிபத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அங்கே நுழைந்த அதிரடிப்படையினர் சிறைக்கைதிகள் அடைக்கப்பட்ட கதவுகளில் தம்மிடமிருக்கும் பிரம்புகளால் தட்டி, “அல்லாஹு அக்பர்” என்று கத்தினார்கள். சிறைக்குள் அங்குமிங்கும் திரிந்து கைதிகளைக் கோபப்படுத்தினார்கள் என்று சாட்சிகள் மூலம் தெரியவருகிறது.
சிறைக்காவலாளிகள், அங்கேயிருக்கும் கைதிகளின் உறவினர்கள், சிறைக்கைதிகள் ஆகியோர் தமது அடையாளகளை வெளியிடாமல் வெளிநாட்டு ஊடகத்துக்கு அளித்த பேட்டியிலிருந்து சில விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. அதிரடிப்படையினரின் நுழைவை அடுத்து சிறைக்கைதிகள் “சர்வாதிகாரி ஒழிக, அரசு ஒழிக” போன்ற கோஷங்களை எழுப்பியிருக்கிறார்கள்.
ஈரானியக் குர்தீஷ் இளம்பெண் சட்டத்தில் குறிப்பிட்டபடி தனது முக்காடைப் போடாததால் கைதுசெய்யப்பட்டுச் சிறைவைக்கப்பட்டாள். அங்கே அவள் மரணமடைந்ததால் கோபமுற்ற ஈரானிய மக்களின் போராட்டத்தால் நாடெங்கும் கலவர நிலைமை உண்டாகியிருந்தது. அச்சமயத்தில், சிறைக்குள் போராட்டம் ஏற்படலாம், எதிர்ப்பாளர்கள் கைதிகளை வெளியே எடுக்கச் சிறையைத் தாக்கலாம் என்ற பயத்தில் அரசு வேண்டுமென்றே சிறைச்சாலைக்குள் ஒரு கலவரம், தீவிபத்தைத் தூண்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அரச படைகளால் சுற்றிவளைக்கப்பட்ட சிறைச்சாலைக் கலவரத்தை அதன் பின்னர் அடக்குவதன் மூலம் ஈரானிய அரசு நாட்டு மக்களை மிரட்டுவதற்காக சிறைச்சாலைத் தீவிபத்து, கலவர அடக்கம் போன்றவற்றை ஒரு நாடகமாக்கியிருக்கலாம் என்று மனித உரிமைகள் அமைப்புகள் குறிப்பிடுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்