சீனா விரும்பிய அளவிலான பங்குகளை ஹம்பேர்க் துறைமுகத்தில் விற்பதை ஜேர்மன் அரசு தடுத்தது.
ஐரோப்பாவின் அடிப்படையான வர்த்தக வலயத்துக்குள் அன்னிய நாடுகள் பெருமளவு நுழைவதை ஐரோப்பிய நாடுகள் தடுத்து வருகின்றன. படிப்படியாக ரஷ்யாவின் எரிபொருட்களை மட்டுமே வாங்குவதை அதிகரித்து அதன் மூலம் ரஷ்யாவில் தமது எரிபொருள் தேவைக்குத் தங்கியிருக்கவேண்டிய நிலைமை போன்றதொரு நிலையை வேறு துறைகளில் எதிர்கொள்ளலாகாது என்பதில் ஐரோப்பிய அரசியல் கட்சிகள் திடமாகியிருக்கின்றன.
ஐரோப்பிய நாடுகளுடனான தனது வர்த்தகம் மூலம் தொழில்துறைத் தயாரிப்புக்கு வேண்டிய பல அடிப்படையான சிறு பாகங்களுக்கான சந்தையைச் சீனா ஆக்கிரமித்திருந்தது. அந்த நிலைமையா கொரோனாக் கட்டுப்பாடுகள் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் தமது தொழிற்சாலைகளுக்குத் தேவையான சிறு பாகங்களில்லாமல் தயாரிப்பையே அவ்வப்போது நிறுத்தின.
ஐரோப்பாவில் சீனா காலூன்ற விரும்பும் இன்னொரு துறை, போக்குவரத்து சம்பந்தப்பட்ட துறைமுகங்களாகும். பல ஆசிய நாடுகளின் துறைமுகங்களைத் தனது நிறுவனங்கள் மூலம் வாங்கியிருக்கிறது சீனா. அதேபோலவே ஐரோப்பாவின் துறைமுகங்களிலும் தனது கிடுக்கிப்பிடியைப் போட எத்தனித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் அதை உன்னிப்பாகக் கவனித்து முடிந்தளவு கட்டுப்படுத்தி வருகிறது.
ஐரோப்பாவின் மூன்றாவது முக்கிய துறைமுகமான ஹம்பேர்க் துறைமுகத்தில் பெருமளவு பங்குகளை வாங்குவதில் சமீபகாலமாகச் சீனா தனது கவனத்தைச் செலுத்தி வந்தது. ஜேர்மனியின் ஆளும் கட்சிக் கூட்டணிக்குள் அது பெரும் சச்சரவை உண்டாக்கியது. பிரதமர் ஒலொவ் ஷொல்ட்ஸ் தொடர்ந்தும் ஜேர்மனி சர்வதேச வர்த்தகத்தில் திறந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார். அவரது கூட்டணி சகாக்களோ சீனாவின் ஆக்கிரம்பிப்பு வர்த்தக நகர்வுகளைச் சுட்டிக்காட்டி அதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
வேறு வழியின்றித் தனது நிலைப்பாட்டில் பின்வாங்கினார் ஷொல்ட்ஸ். சீனா விரும்பியபடி துறைமுகத்தில் 35 % பங்குகள் வாங்குவது தடுக்கப்பட்டது. 24.9 % பங்குகளை மட்டுமே வாங்க சீன அரசின் நிறுவனமான Cosco அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சீனா அரசு அதற்கு ஒத்துக்கொண்டிருக்கிறது.
கொரோனாக்காலத்தின் பின்னர் சீனா செல்லும் முதல் ஐரோப்பியத் தலைவராக அடுத்த வாரம் பயணமாகிறார் ஷொல்ட்ஸ்.
சாள்ஸ் ஜெ. போமன்