கட்டாரின் தலைநகரில் இருந்து வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் தொழிலாளர்கள் | சமூக சட்டங்களை மீறும் கட்டார்

உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் வரும் நவம்பர் மாதம் 20 ம் திகதி கட்டாரின் தலைநகர் டோகாவில் துவங்கவுள்ள நிலையில் , ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வசிக்கும் அடுக்குமாடிக்குடியிருப்புகளிலிருந்துமக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகக்கிண்ண உதைபந்தாட்டத்திற்கு வரும் ரசிகர்கள் தலைநகர் டோகாவில் தங்க வைக்கும் ஏற்பாடாக இந்த நடவடிக்கைகள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஒரு டசினுக்கும் அதிகமான அடுக்குமாடி கட்டடங்களிலிருந்து தொழிலாளர்கள் அங்குள்ள அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டு அவை மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.


இந்த தொழிலாளர்கள் குறிப்பாக ஆசிய ஆபிரிக்க நாட்டவர்கள் என்றும் உலகசெய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டார் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நடத்தும் விதம் சர்வதேச சமூகச் சடட்டங்களை மீறும் செயல் என கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் குறிப்பாக தனிநபர்களாக வாழ்வோரை மட்டுமே கட்டார் அதிகாரிகள் குறிவைப்பதாகவும், அவர்கள் வெளியே உள்ள நடைபாதைகளில் படுத்தாலும் அதுகுறித்து அக்கறையற்ற தன்மை இருப்பதாகவும், அதேவேளை டோகாவுக்கு வெளியே இயன்ற அறைகளைத்தேடுமாறு வற்புறுத்தப்பட்டது எனவும் பாதிக்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.


கட்டாரர் உலகக்கிண்ணப் போட்டிகளை வெற்றிகரமாக நடாத்துவதற்கான உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்பிய தொழிலாளர்கள்,  தற்சமயம் உலகக்கிண்ணப்போட்டிகள்  நெருங்கும்போது ஒதுக்கித் தள்ளப்படுவதாக சர்வதேச அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *