குஜராத்தில் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டு சமீபத்தில் புனருத்தாரணம் செய்யப்பட்ட பாலம் உடைந்து 40 பேர் மரணம்.
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு நதியின் மீது கட்டப்பட்டிருக்கும் பாலம் முறிந்து விழுந்ததில் சுமார் 40 பேர் இறந்துவிட்டதாகக் குஜராப் பொலிசார் தெரிவிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமையன்று விபத்து நடந்தபோது பாலத்தில் சுமார் 400 பேர் இருந்ததாகவும் அத்தனை பேரைத் தாங்கும் அளவுக்கு அப்பாலம் பலமானது அல்ல என்றும் உள்ளூர்ச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
மீட்புப் பணியாளர்கள் மும்முரமாக அங்கே உதவிகள் செய்வதில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடும் அமைச்சர் பிரிஜேஷ் மேர்யா மேலும் 30 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்றே எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். குஜராத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்களாகக் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்.
18 ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ் இந்தியா இருந்தபோது அந்த 230 மீற்றர் பாலம் கட்டியெழுப்பப்பட்டது. புனருத்தாரண வேலைகள் செய்வதற்காகக் கடந்த ஆறு மாதங்களாகப் பூட்டப்பட்டுக் கிடந்த பாலம் கடந்த வாரம் தான் மீண்டும் திருத்தப்பட்ட பின்னர் திறந்து வைக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்