இஸ்ராயேல் தன்னிடமிருக்கும் அணு ஆயுதங்களை அழித்துவிடவேண்டும் என்கிறது ஐ.நா-வின் பொதுச்சபை.
கூடியிருக்கும் ஐ.நா-வின் பொதுச்சபைத் தீர்மானங்களில் ஒன்று இஸ்ராயேல் தன்னிடமிருக்கும் அணு ஆயுதங்களை அழிக்கவேண்டும் என்கிறது. பாலஸ்தீன நிர்வாகத்தின் பின்னணியில் எகிப்தினால் அந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதைத்தவிர பஹ்ரேன், மொரொக்கோ, எமிரேட்ஸ், ஜோர்டான் உட்பட்ட 19 நாடுகள் அந்தத் தீர்மானத்தில் கையொப்பமிட்டிருந்தன.
152 நாடுகளின் ஆதரவைப் பெற்ற அந்தத் தீர்மானம் ஐந்தே நாடுகளால் எதிர்க்கப்பட்டது. அமெரிக்கா, கனடா, மைக்ரோனேசியா, பலவ் மற்றும் இஸ்ராயேல் ஆகியவையே தீர்மானத்தை எதிர்த்தவர்களாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட்ட 24 நாடுகள் தமது வாக்குகளை எவருக்கும் இடாமல் தவிர்த்தன.
உலகில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளாக 9 நாடுகள் கருதப்படுகின்றன. அவைகளில் ஒன்றான இஸ்ராயேல் தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக உத்தியோகபூர்வமாக என்றும் குறிப்பிட்டதில்லை. தன்னிடமிருக்கும் அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை வேறு நாடுகளுக்குப் பரப்புவதில்லை என்ற ஒப்பந்தத்தில் இஸ்ராயேல் சேரவுமில்லை.
“இஸ்ராயேல் எவ்வித தாமதமுமின்றி அணு ஆயுதத் தொழில்நுட்பத்தைப் பரப்பலாகாது என்ற உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு, அணு ஆயுதங்களை உருவாக்குவது, உற்பத்தி செய்வது, சோதனை செய்வது அல்லது அணு ஆயுதங்களை வைத்திருப்பதை கைவிடுவதைச் செயற்படுத்தவேண்டும். மேலும் தனது நாட்டிலிருக்கும் பாதுகாப்பற்ற, பாதுகாக்கப்பட்ட அணுசக்தி வசதிகள் அனைத்தையும் ஐ.நா-வினால் இயக்கப்படும் அணு சக்தி அதிகாரத்தின் கீழ் ஒப்படைக்கவேண்டும், ”என்கிறது, ஐ.நா-வின் பொதுச்சபைத் தீர்மானம்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு முன்னர் நடந்த வாதங்களின்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ராயேலின் தூதுவர் ஈரான் அணு ஆயுதத்தை உண்டாக்குவதற்காகச் செய்துவரும் முயற்சிகள் பற்றி எச்சரிக்கை செய்தார். ஈரான் இரகசியமாக அணு ஆயுதப் பரிசோதனையைத் தனது எல்லையிலிருக்கும் சிரியாவுக்குள் நடத்தி வருவது பற்றியும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் இஸ்ராயேல் என்ற நாடு இருக்கலாகாது என்று தெளிவாகக் குறிப்பிடும் பக்கத்து நாடுகல் இருக்கும் வரையில் தனது பாதுகாப்புக்காக இஸ்ராயேல் முடிந்ததைச் செய்யவேண்டும் என்றும் கூறினார்.
சாள்ஸ் ஜெ. போமன்